நாடாளுமன்றத்தில் அதானிக்கும் உங்களுக்கும் என்ன உறவு மோடி? என்று எழுப்பிய ஒற்றைக் கேள்வி தான் அவரது பதவி பறிபோகக் காரணமாக அமைந்தது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.அது உண்மை என்பதை தற்போது உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 05-August-2023

‘எப்படி மோடி என்ற குடும்பப் பெயர் உள்ளவர்கள் திருடர்களாக இருக்கிறார்கள்’ என்று 2019 ஆம் ஆண்டு கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி பேசினார். கர்நாடகாவில் பேசியதற்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கைத் தொடுத்தவர்களே உயர் நீதிமன்றத்தில் தடையும் பெற்றனர். பின்னர் திடீரென தடையை நீக்கி மீண்டும் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை வேகமாக நடத்தினர். இருபதே நாட்களில் இந்த அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றவர்கள், தாங்கள் வகிக்கும் பதவியை இழப்பர். இதனைப் பயன்படுத்தி, தீர்ப்பு வந்த மறுநாளே ராகுல் காந்தியின் எம்பி பதவியைத் தகுதி நீக்கம் செய்து பதவியைப் பறித்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து சூரத் நீதிமன்றத்தையும் குஜராத் உயர் நீதிமன்றத்தையும் ராகுல் காந்தி அணுகினார். அவரது மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கில் ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான அபிஷேக் மனு சிங்க்வி எடுத்து வைத்த வாதம் :

* ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, மோத் வானிகா சமாஜ் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரைப் போல் மோடி என்ற பெயரில் பல சாதிகள் உள்ளன.

* மொத்தம் 13 கோடி பேர் மோடி என்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இதில் பாஜக எம்எல்ஏ மட்டுமே கிரிமினல் அவமதிப்பு வழக்கை தொடுத்துள்ளார்.

* அவதூறு வழக்கில் குறிப்பிட்டுள்ளபடி, மோடி என்ற பெயர் குறிப்பிட்ட சாதியை சார்ந்தது இல்லை.

* இந்த கிரிமினல் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை கீழ் நீதிமன்றம் அளித்தது அரிதான ஒன்று.

* அவதூறு வழக்கை சமூகத்திற்கு எதிரான பெரிய குற்றமாக, கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலைக் குற்றமாகவோ நான் பார்க்கவில்லை. இந்த வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வேண்டிய அவசியம் என்ன?

* புகார் கொடுத்தவர் ராகுல் காந்தியின் பேச்சை நேரில் கேட்கவில்லை. வாட்ஸ்அப் தகவல் மற்றும் நாளேடுகளில் வந்த செய்தியை வைத்தே அறிந்துள்ளார்.

* சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தவரே, ஓராண்டுக்கு உயர் நீதிமன்றத்தில் தடை பெற்றார். தடையை நீக்கிய ஒரு மாதத்தில் சூரத் நீதிமன்றம் ராகுலுக்குத் தண்டனை விதித்தது.

நீதிபதிகள் அளித்த தீர்ப்பு :

* இந்திய தண்டனைச் சட்டம் 499 வது பிரிவின் கீழ், அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்க முடியும்.

* அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் விதித்ததற்கான தகுந்த காரணத்தை சூரத் நீதிமன்ற நீதிபதி தெரிவிக்கவில்லை.

* 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8(3) வது பிரிவின் படி தகுதி நீக்கம் தானாகச் செயல்பாட்டுக்கு வரும் என்ற நோக்கத்தில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை குறைத்து வழங்கப்பட்டிருந்தால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி பதவி தகுதியிழப்பு பொருந்தியிருக்காது.

* சாதாரண, ஜாமீனில் வெளியே வரக்கூடிய மற்றும் இவை அனைத்தும் கலந்த அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனையை விதித்தற்கான காரணத்தை விசாரணை நீதிபதி தெரிவிக்க வேண்டியது அவசியம்.

* ராகுல் காந்தி தரப்பு வாதத்தை நிராகரிக்க சூரத் நீதிமன்றமும் குஜராத் உயர் நீதிமன்றமும் ஏராளமான பக்கங்களைச் செலவழித்துள்ளன.

* மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8 (3) வது பிரிவின் கீழ் தகுதி நீக்கம் செய்ததால், தனிப்பட்ட ஒருவரது உரிமையை மட்டும் பாதிக்கவில்லை. அவரை தேர்வு செய்த தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்பட்டுள்ளது.

* அதிகபட்ச தண்டனையை வழங்கியதற்கான காரணத்தை சூரத் நீதிமன்றம் தெரிவிக்கவில்லை என்பது தான் உண்மை.

* தனி நீதிபதியாக 125 பக்கங்களுக்குத் தீர்ப்பை எழுதியிருப்பது சுவாரசியமாக இருக்கிறது.

* அவதூறு வழக்கு செல்லும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் விரிவாகத் தீர்ப்பளித்தபோதும், அதற்கான கூடுதல் காரணங்களை தெரிவிக்கவில்லை.

இவ்வாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அவதூறு வழக்கை தாக்கல் செய்தவர்களே ஓராண்டுக்குத் தடை வாங்கினார்கள். நாடாளுமன்றத்தில் அதானிக்கும் உங்களுக்கும் என்ன உறவு மோடி? என்று எழுப்பிய ஒற்றைக் கேள்வி தான் அவரது பதவி பறிபோகக் காரணமாக அமைந்தது. அதன்பிறகு தான் தடையை நீக்கி வழக்கை சூரத் நீதிமன்றத்தில் தொடர்ந்தனர்.ராகுல் காந்தி கேள்வி எழுப்பி ஒரே மாதத்தில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பெற்றுத் தந்தனர். நாடாளுமன்றத்தில் கேள்விகளால் துளைத்தெடுக்கும் ராகுல் காந்தியின் எம்பி பதவியைப் பறிப்பது ஒன்று தான் இவர்கள் நோக்கம் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

அது உண்மை என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது உச்ச நீதிமன்ற தீர்ப்பு.

 

தலைவர் திரு கே எஸ் அழகிரி