ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்ந்து தமிழ்நாட்டின் நலனுக்கு விரோதமாகவே இருந்து வருகிறது. இத்தகைய போக்கை இனியும் அனுமதிக்க முடியாது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 06-Apr 2023

ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதல் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். கடந்த காலங்களில் நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் பல மாதங்களாக கிடப்பில் போடுகிற வகையில் செயல்பட்டு வந்தார். ஏறத்தாழ 20-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநரின் முடக்கத்தால் நிறைவேற்றப்படாமல் உள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசுக்கு எதிராகவே ஆளுநர் செயல்படுகிறார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய ஆர்.என். ரவி, ‘ஸ்டெர்லைட் ஆலை நாட்டின் 40 சதவிகித காப்பர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. இதனை வெளிநாட்டு நிதியுதவிகள் மூலம் மக்களை தூண்டி விட்டு மூடி விட்டனர்’ என்று பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. ஸ்டெர்லைட் ஆலையினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பினால் வாழ்வாதாரத்தை இழந்த அந்த பகுதி மக்கள் கடுமையான போராட்டம், 14-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு மற்றும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்புகளோடு மூடப்பட்டதை அனைவரும் அறிவார்கள். இதற்கு பிறகும் இத்தகைய குற்றச்சாட்டை கூறுவதற்கு அவரிடம் ஆதாரம் இருக்கிறதா ? ஆதாரம் இருந்தால் தமிழக அரசிடம் வழங்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இத்தகைய கருத்துகளை கூறுவது போராடிய மக்களை புண்படுத்துகிற செயலாகும்.

மேலும், உரையாற்றும் போது ‘ஆளுநர் ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் அதை நிலுவையில் வைத்திருந்தால் அதை நிராகரிப்பதாக பொருள்’ என்று கூறுவதற்கு இவருக்கு என்ன உரிமை இருக்கிறது ? அரசமைப்புச் சட்ட உறுப்பு 163 (1)-ன்படி ஆளுநருக்கு உதவி செய்வதற்கும், அறிவுரை கூறுவதற்கும் முதலமைச்சர் தலைமையில் மாநிலங்களில் அமைச்சர்கள் குழு ஒன்று இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. அமைச்சரவை குழுவின் அறிவுரைக்கு எதிராக ஆளுநர் செயல்பட முடியாது. அவருக்குள்ள விருப்புரிமையின் அளவு மிகமிக குறைவாகும். தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாவை ஒப்புதல் வழங்காமல் திருப்பியனுப்பினால் அதே மசோதாவை சட்டப் பேரவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அதை நிராகரிப்பதற்கு ஆளுநருக்கு உரிமையில்லை. ஆளுநர் என்பவர் நிர்வாகத்தின் பெயரளவிலான தலைவரே தவிர, உண்மையான நிர்வாகத் தலைவர் முதலமைச்சர் என்பதை அரசமைப்புச் சட்டம் உறுதி செய்கிறது.

அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அதிகார வரம்புகளை மீறுகிற வகையில் தொடர்ந்து தமிழக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். இவரது செயல்பாடுகளை பார்க்கிற போது, மத்திய பா.ஜ.க. தலைவர்களால் ஏவி விடப்பட்டவராகவே இவரது கருத்துகள் அமைந்து வருகிறது. இத்தகைய கருத்துகளை கூறுவதற்கும், ஆளுநர் மாளிகையில் தொடர்ந்து கூட்டங்களை நடத்தி போட்டி அரசாங்கமாக செயல்படுவதை இனியும் அனுமதிக்க முடியாது.

தமிழக ஆளுநர் அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பணிகளை செய்யாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு குந்தகம் விளைவிப்பதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறார். பல்வேறு மதங்கள், மொழிகள், ஜாதிகளை சார்ந்த மக்கள் அமைதியாக வாழும் தமிழகத்தில் சமுதாயத்தை பிளவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருகிறார். மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கையிருக்கிற தமிழக அரசுக்கு எதிராக இவர் கருத்து கூறுவது எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. சனாதன தர்மத்தை போற்றுவது, திருக்குறளுக்கு மதச்சாயம் பூசுவது, தமிழர் பண்பாட்டு மரபுகளை இழிவுபடுத்தி பேசுவது தமிழக மக்களை இழிவுபடுத்துகிற செயலாகும். மதவெறுப்பை தூண்டி மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக செயல்படுவதோடு, பா.ஜ.க.வின் ஊதுகுழலாகவே இவர் செயல்பட்டு வருகிறார்.

எனவே, ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்ந்து தமிழ்நாட்டின் நலனுக்கு விரோதமாகவே இருந்து வருகிறது. இத்தகைய போக்கை இனியும் அனுமதிக்க முடியாது. இதை தடுத்து நிறுத்துகிற வகையில் தமிழக மக்கள் நலனில் அக்கறையுள்ள தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் தமிழக ஆளுநர் மாளிகைக்கு முன்பாக பெருந்திரளான மக்களோடு முற்றுகை போராட்டம் நடத்தி கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

கே.எஸ். அழகிரி