சென்னை நங்கநல்லூருக்கு அருகில், மூவரசம்பட்டில் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் தெப்பக் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியின் போது 5 பேர் நீரில் மூழ்கி பலியான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 04-Apr 2023

சென்னை நங்கநல்லூருக்கு அருகில், மூவரசம்பட்டில் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் தெப்பக் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியின் போது 5 பேர் நீரில் மூழ்கி பலியான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். சுமார் 25 பேர் தீர்த்தவாரியில் பங்கேற்றதில் பெரும்பாலானவர்கள் நீச்சல் தெரியாதவர்களாக இருந்திருக்கிறார்கள். மேலும், குளம் 10 அடி முதல் 40 அடி வரை ஆழம் கொண்டிருந்ததால் அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாததால் இந்த கோரச் சம்பவம் நடந்திருக்கிறது. இந்த விபத்தில் பலியானவர்களுக்கு தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 2 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது.

பெரும்பாலும் கோயில் திருவிழாக்களில் நெறிமுறை கட்டுப்பாடுகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால் இத்தகைய விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதை முற்றிலும் தவிர்ப்பதற்கு பாதுகாப்பாக தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை கட்டாயம் அழைக்கப்பட்டு உரிய முறையில் நடத்துவதற்கு தகுந்த ஆணைகளை இந்து சமய அறநிலையத்துறை பிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய கோர விபத்தில் பலியான 5 நபர்களின் குடும்பங்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.எஸ். அழகிரி