அறிக்கை | 07 May 2022
தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கடந்த மக்களவை, சட்டமன்றம், ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் அனைத்திலும் மக்கள் பேராதரவோடு வெற்றி பெற்று மக்களின் நம்பிக்கையைத் தொடர்ந்து பெற்று வருகிறது. இதன்மூலம் தமிழகத்தில் நடைபெற்று வந்த பத்தாண்டு கால அ.தி.மு.க.வின் அராஜக ஊழல் ஆட்சி அகற்றப்பட்டு திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அமைச்சரவை கடந்த மே 7 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டது. பதவியேற்ற அன்றே முதலமைச்சர் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளின்படி 5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டு சாதனை படைத்தார். பதவிப்பிரமாணம் எடுக்கும் போது, தமது பெயரை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற உரத்த குரலோடு கூறியது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிற வகையில் அமைந்திருந்தது. அவர் பதவியேற்று ஓராண்டு நிறைவு பெறுகிறது. பதவியேற்ற நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் தமிழ்ச் சமுதாயத்திற்கு எதையாவது செய்ய வேண்டுமென்கிற தீவிர முனைப்பின் காரணமாக அவர் செயல்பட்டதால் மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறார். இதைப் பெறுவதற்காக ஓய்வறியாமல் உழைத்திருக்கிறார். உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைத்திருக்கிறது. தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணம் செய்கிறது என்று சொன்னால் அதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் கடுமையான உழைப்பு தான் காரணமாகும். இதன்மூலம் உழைப்பே உயர்வு தரும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் அவர்கள் பெரும் கடன் சுமையோடு தான் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இத்தகைய கடன் சுமையை ஏற்றுக் கொண்டு மக்கள் நலன்சார்ந்த நல்லாட்சியை வழங்குவதற்கு உரிய நிதி ஆதாரங்களைத் திரட்டி, சிறப்பானதொரு ஆட்சியை ஓராண்டு காலமாக நடத்தி வருகிறார்.
தமிழக அரசின் சார்பில் ஒட்டுமொத்தமாக 2,875 கொள்கை ரீதியிலான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், 87 சதவிகிதத்திற்கும் மேலான அறிவிப்புகள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 505 வாக்குறுதிகளில் பாதிக்கும் மேல் நிறைவேற்றப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டு அவர்களது நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. விவசாய பம்புசெட்டுகளுக்கான மின் இணைப்பு கோரி 5 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன. இந்நிலையில் தற்போது 1 லட்சம் விவசாய பம்பு செட்டுகளுக்கு ஓராண்டிற்குள் மின் இணைப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நெடுஞ்சாலைத்துறைக்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டு சாலைகளை மேம்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இருந்தால்தான் தொழில் வளருவதற்கான முதலீடுகள் வரும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
மத்திய பா.ஜ.க. அரசின் தமிழக விரோதப் போக்கை எதிர்த்து துணிச்சலுடன் குரல் கொடுக்கிற முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் திகழ்கிறார். அசுர பலத்தோடு இந்தியாவை ஆட்சி செய்து வருகிற பா.ஜ.க. அரசு இந்துத்வா கொள்கைகளைப் பரப்புவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்த முயல்கிறது. இதை துணிவுடன் எதிர்க்கிற அரசியல் பேராண்மைமிக்க முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் கடந்த ஓராண்டு காலமாக செயல்பட்டு வருகிறார். பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநில முதல்வர்களை ஒருங்கிணைத்து உரிமைக் குரல் கொடுக்கிற முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். தமிழகத்தில் நல்லாட்சி வழங்க வேண்டிய கடமை உணர்வோடும், அதே நேரத்தில் மத்தியில் நடைபெற்று வரும் பா.ஜ.க.வின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டிய கூடுதல் பொறுப்போடும் அவர் செயல்பட்டு வருகிறார். இந்த வகையில் இந்தியாவிற்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது தமிழகத்தின் முதலமைச்சராக திரு. மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தால் தமிழகம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அந்த நம்பிக்கையின்படி தமிழகத்தில் நல்லாட்சி அமைந்து அனைத்து துறைகளின் செயல்பாட்டினாலும், அனைத்து மக்களும் பயன் பெறுகிற வகையில் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
தமிழக முதலமைச்சரைப் பொறுத்தவரை 10 ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டிய சாதனைகளை ஓராண்டில் நிகழ்த்தி மக்களின் பேராதரவையும், பெருமதிப்பையும் நாள்தோறும் பெற்று செயல்பட்டு வருகிறார். எஞ்சியிருக்கிற ஆட்சிக் காலத்தில் தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று தலை நிமிர்ந்த தமிழகமாக மாற்றுகிற முயற்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற ஓராண்டு நிறைவு நாளில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.
கே.எஸ். அழகிரி