தமிழ்நாடு மக்களின் பேராதரவோடு 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் தமிழ்நாட்டில் நல்லாட்சி தொடர முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நான்காண்டு சாதனை நிச்சயம் துணை புரியும்.

07-May-2025

அறிக்கை

கடந்த 2019 மக்களவை தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட பரப்புரையினால் அமோக வெற்றி கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்;தது. தி.மு.க. ஆட்சி அமைந்து, இன்று ஐந்தாம் ஆண்டில் காலடி பதித்து மகத்தான சாதனைகளை புரிந்து வருகிற நிலையில் திசையெங்கும் மக்கள் பாராட்டுகிற மகத்தான ஆட்சி புரிகிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். 2021 இல் ஆட்சி அமைந்த போது, 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி கடன் சுமையோடு அ.தி.மு.க. ஆட்சியை தி.மு.க.விடம் விட்டுச் சென்றது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.69 சதவிகிதமாக உயர்ந்து ஒன்றிய பா.ஜ.க. அரசின் வளர்ச்சியான 6.5 சதவிகிதத்தை விட உயர்ந்து சாதனை படைத்திருக்கிறது. தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூபாய் 17 லட்சத்து 23 ஆயிரம் என்றளவிற்கு உயர்ந்து இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டின் தனிநபர் சராசரி வருமானம் 2024-25 இல் ரூபாய் 3.58 லட்சம். ஆனால், தேசிய சராசரி தனிநபர் வருமானம் ரூபாய் 2.6 லட்சமாக குறைவாக இருக்கிறது. அந்த வகையில் நாடே போற்றுகிற வகையில் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போட்டு வருவதை பொருளாதார வல்லுநர்கள் பாராட்டுகிறார்கள்.

மின்னணு சாதன ஏற்றுமதியில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 41.23 சதவிகிதமாக இருப்பது சாதனையாகும். அதேபோல, வணிக வரியில் கடந்த ஆண்டு 5 லட்சத்து 80 ஆயிரம் கோடி வசூல் செய்யப்பட்டிருக்கிறது. பத்திரப் பதிவுத்துறை 2021 இல் ரூபாய் 10,243 கோடியாக இருந்த வருவாய், 2025 இல் ரூபாய் 21,968 கோடியாக நான்கு ஆண்டுகளில் இருமடங்கு கூடியிருக்கிறது. இந்தியாவின் மொத்த வேலை வாய்ப்பில் 15 சதவிகிதத்தை பெற்றிருக்கிற தமிழ்நாட்டில் 39,666 பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பதிவு 50 லட்சத்தை தாண்டி சாதனை படைத்திருக்கின்றன. வளர்ச்சி என்பது சென்னையை மட்டுமல்லாமல், கோவை, மதுரை, திருச்சி என்று அனைத்து நகரங்களிலும் பரவியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் திட்டங்கள் ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்காக திட்டமிடப்பட்டு பயனடைந்து வருகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் 1 லட்சத்து 45 ஆயிரம் பட்டதாரிகளும், தொழிற்பயிற்சி நிறுவனங்களில் 1 லட்சத்து 15 ஆயிரம் மாணவர்கள் பட்டம் பெற்று வருகிறார்கள். இவர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் இல்லாத நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகள் பெற்று வருகிறார்கள். இது தமிழ்நாட்டின் அமோக வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பு அதிகரிப்புக்கும் சிறந்த சான்றுகளாகும்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவர்கள் வழங்கிய 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை அவர் நிறைவேற்றியிருக்கிறார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு,கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறார். அவரது சாதனைகளின் சிகரமாக கலைஞர் மகளிர் உரிமை திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம், விடியல் பயணம் ஆகியவற்றில் மிகச் சிறந்த அளவில் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் படித்த பட்டதாரிகள் ஆண்டுதோறும் படித்து வெளியே வருவதால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கத்தில் முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதோடு, முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூபாய் 10 லட்சம் கோடிக்கு மேல் புதிய முதலீடுகளை பெற்று 32 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் 3 லட்சத்து 80 ஆயிரம் 467 கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படுகிறது. இதைப் போல, மக்களை தேடி மருத்துவம், விவசாயிகளுக்கு, கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் என சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். நாள்தோறும் அறிவிப்புகள், சாதனைகள் என தமிழ்நாடு இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

கடந்த 2021 இல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடனே கொரோனா தொற்று நோயை எதிர்கொள்கிற முயற்சியில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, புயல், மழை, வெள்ளத்தின் காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்ட போது, ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசு கேட்டது ரூபாய் 38,000 கோடி. ஒன்றிய அரசின் நிதியிலிருந்து சல்லிக் காசு கூட கொடுக்காமல் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது. அதேபோல, மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை என்றால், சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கு தர வேண்டிய ரூபாய் 2152 கோடியை தர மாட்டோம் என்று பா.ஜ.க. அரசு பழிவாங்கிய நிலையில் சொந்த நிதி மேலாண்மையின் மூலமாக கல்வித்துறையில் மகத்தான சாதனைகளை புரிந்து வருகிறது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களுக்கு மறுக்கப்பட்டு வந்த கல்வியை இலவசமாக வழங்குகிற நோக்கத்தில் கிராமந்தோறும் பள்ளிகளை தொடங்கி பகல் உணவு திட்டத்தை செயல்படுத்தி கல்வியில் புரட்சி செய்ததின் அடிப்படையில் இன்று தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

தமிழ்நாட்டின் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தி, மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி புரிந்து வருகிற தமிழ்நாடு முதல்வர் மேற்கொள்கிற சுற்றுப் பயணங்களில் மக்கள் அலை அலையாக திரண்டு வந்து அன்பையும், ஆதரவையும் பொழிந்து வருகிறார்கள். இதை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க., அ.தி.மு.க.வைப் போன்ற தமிழக விரோத கட்சிகள் காழ்ப்புணர்ச்சி அரசியலை செய்து வருகிறார்கள். இதை முறியடிக்கிற வகையில் தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கட்டுக்கோப்பாக ஒருமித்த கொள்கை பற்றோடு செயல்பட்டு வருகின்றன. ஆனால், இந்தியா கூட்டணியை எதிர்க்கிற கட்சிகள் அணி சேர்வதில் எத்தனை தடுமாற்றங்கள், முரண்பாடுகள், சந்தர்ப்பவாதங்கள் என்பதை தமிழ்நாட்டு மக்கள் வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.

எனவே, தமிழ்நாடு மக்களின் பேராதரவோடு 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் தமிழ்நாட்டில் நல்லாட்சி தொடர முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நான்காண்டு சாதனை நிச்சயம் துணை புரியும். நாளை நமதே என்பது நாளுக்கு நாள் உறுதியாகி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் சாதனை பயணம் தொடர மீண்டும் வாழ்த்துகிறேன்.

தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ