இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் துரும்பைக் கூட எடுத்துப் போடாத பா.ஜ.க., விடுதலைக்கு பாடுபட்ட தேசிய தலைவர்களின் முக்கியத்துவத்தை கண்டு சகித்துக் கொள்ளாமல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதை இந்திய மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அறிக்கை 13 April 2023

சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய தொடக்க கல்வி வழங்குவது போன்ற முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியதில் மிகப் பெரிய பங்காற்றிய மௌலானா அபுல்கலாம் ஆசாத் பற்றி 11-வது வகுப்பு அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த சில பகுதிகளை தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் நீக்கியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. கல்வி அமைச்சராக இருந்த போது, கட்டிடக் கலை பள்ளியை நிறுவுதல், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்திய அறிவியல் நிறுவனங்கள் மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா போன்ற அமைப்புகளை உருவாக்குவதில் பெரும்பங்காற்றியவர் அபுல்கலாம் ஆசாத். அத்தகைய பெருமகனாரின் பங்களிப்பை இருட்டடிப்பு செய்வதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்திய அரசமைப்பை உருவாக்குவதில் அரசியல் நிர்ணய சபையில் முக்கிய பங்காற்றியவர் ஆசாத். அதற்காக அமைக்கப்பட்ட 8 பெரிய குழுக்களில் ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத், சர்தார் படேல், மௌலானா ஆசாத், அம்பேத்கர் ஆகியோர் இந்த குழுக்களுக்கு தலைமை தாங்கியது ஏற்கனவே பாடப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது. பல்வேறு கருத்து வேறுபாடுகளை இவர்கள் கொண்டிருந்தாலும், இந்தியாவிற்கு அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் கருத்தொற்றுமை அடிப்படையில் நாட்டின் நலன் கருதி செயல்பட்டதை எவரும் மறந்திட இயலாது. ஆனால், தற்போது 11-வது வகுப்பிற்கான புதிய பதிப்பில் ஆசாத்தின் பெயர் மட்டும் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
2009 இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொடங்கப்பட்ட மௌலானா கல்வி உதவித்தொகை திட்டத்தை கடந்த ஆண்டு பா.ஜ.க. அரசின் சிறுபான்மைத்துறை அமைச்சகம் நிறுத்தியதை அனைவரும் அறிவார்கள். இத்திட்டத்தின் மூலம் முதுநிலை ஆராய்ச்சி படிப்பிற்காக 5 ஆண்டுகளுக்கு சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றையும், அதில் ஈடுபட்டு தியாகம் செய்தவர்களின் பங்களிப்பையும் அரசியல் உள்நோக்கத்தோடு மறைத்து வரலாற்றுத் திரிபு வாதங்களை செய்து கல்வியை காவி மயமாக்க மோடி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னர் 1946 இல் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராகவும், பிரிட்டீஷ் தூதுக் குழுவோடு பண்டித நேருவுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் பெரும் பங்காற்றிய அபுல்கலாம் ஆசாத்தின் பங்களிப்பை பா.ஜ.க. அரசு பள்ளி பாடத் திட்டத்திலிருந்து நீக்கியிருப்பதை மிகமிக வன்மையாக கண்டிக்கிறேன். பா.ஜ.க. அரசு இத்தகைய இருட்டடிப்பு வேலைகளை செய்தாலும் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றிலும், இந்தியாவின் வளர்ச்சியிலும் அபுல்கலாம் ஆசாத் நிகழ்த்திய பங்களிப்பை எவரும் மூடி மறைத்திட இயலாது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் துரும்பைக் கூட எடுத்துப் போடாத பா.ஜ.க., விடுதலைக்கு பாடுபட்ட தேசிய தலைவர்களின் முக்கியத்துவத்தை கண்டு சகித்துக் கொள்ளாமல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதை இந்திய மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
– தலைவர் திரு கே.எஸ். அழகிரி

கே.எஸ். அழகிரி