பிரதமர் மோடி, ஜனநாயகத்தில் ஒரு சர்வாதிகாரியைப் போலச் செயல்படுவதால் தான் பாராளுமன்றம் இத்தகைய தாக்குதலுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

15-Dec-2023

அறிக்கை

புதிய நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பை மீறி கலர் குண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதற்குப் பின்னாலே மிகப்பெரிய திட்டமிட்ட சதி நடந்திருக்கிறது. கடந்த சில மாத காலமாக முகநூலில் இவர்கள் கருத்து பரிமாற்றம் செய்திருக்கிறார்கள். எதிர்க்கட்சியினரின் கருத்து சுதந்திரத்தைப் பறிப்பதில் அக்கறையுள்ள பா.ஜ.க. சட்டவிரோதமாகச் செயல்பட்ட இத்தகைய குழுக்கள் மீது கண்காணிப்பு இல்லாமல் போனது அப்பட்டமான அலட்சியப் போக்காகும். புதிய நாடாளுமன்றத்தின் வடிவமைப்பே பயங்கரவாத, தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அனுகூலமாக அமைந்திருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. மக்களவையில் உள்ள இருக்கைகளுக்கு மேலே 10 அடி உயரத்தில் பார்வையாளர்கள் அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து தான் கலர் குண்டு தாங்கியவர் மக்களவைக்கு உள்ளே எகிறிக் குதித்து அமளியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். ஒட்டுமொத்தமாகப் பார்க்கிற போது, அப்பட்டமான பாதுகாப்பு குளறுபடி அம்பலமாகியிருக்கிறது. கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு இதே பா.ஜ.க. ஆட்சியில் பாராளுமன்றம் தாக்குதலுக்கு இறையாகி 9 பேர் பலியான துயரச் சம்பவம் நடந்த அதே நாளில் மீண்டும் இத்தகைய கொடிய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இது மோடி ஆட்சியின் மீது படிந்த அழிக்க முடியாத கறையாகும்.

இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத பிரதமர் மோடியும், அமித்ஷாவும் சம்பவம் நடந்த போதும், சம்பவம் நடந்த மறுநாளும் அவைக்கு வராமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டுள்ளனர். ஆனால், தலைவர் ராகுல் காந்தி இந்த சம்பவத்தின் போது அவையில் இருந்திருக்கிறார். இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிற அவரைப் போன்ற மக்களவை உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய ஒன்றிய அரசு அதில் முற்றிலும் தோல்வியடைந்து விட்டதையே இந்த சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும், இதன் பின்னணி குறித்தும், இதில் பயங்கரவாத குழுக்களின் தொடர்பு இருக்கிறதா ? என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதற்கான விளக்கத்தை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டுமென்று கோரி குரல் எழுப்பிய மக்களவை உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், கனிமொழி, சுப்பராயன், ஜோதிமணி உள்ளிட்டவர்கள் எஞ்சியிருக்கிற நாடாளுமன்ற கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பென்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். சஸ்பென்ட் செய்யப்பட்ட 14 பேரில் 6 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுத்த சபாநாயகர் கலர் குண்டு தாக்குதலில் ஈடுபட்டவருக்கு மக்களவைக்கு உள்ளே நுழைய அனுமதிச் சீட்டு வழங்கிய மைசூர் பா.ஜ.க. எம்.பி., பிரதாப் சின்கா மீது இதுவரை எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. அவர்மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அனுமதிச் சீட்டு வழங்கியவர் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்தவராக இருந்திருந்தால் சபாநாயகரின் நடவடிக்கையும், ஒன்றிய பா.ஜ.க. அரசின் அணுகுமுறையும் எப்படி இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இதன்மூலம் பா.ஜ.க.வின் அப்பட்டமான பாரபட்ச நிலையும், பழிவாங்கும் போக்கும் முழுமையாக வெளிப்படுகிறது.

தமிழக ஆளுநர் மாளிகைக்கு வெளியே நடந்த சிறிய அசம்பாவித நிகழ்வுக்கு சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது, உடனடியாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்று அறிக்கை வெளியிட்ட பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இதற்கெல்லாம் என்ன பதில் கூறப்போகிறார் என்று தெரியவில்லை. ஆனால், ஆளுநரை முதலமைச்சர் சந்தித்துப் பேச வேண்டுமென்று பரிந்துரை செய்கிறார்கள். அனைத்து மசோதாக்களையும் பரிசீலனை செய்யாமல் ஒட்டுமொத்தமாகக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டு தமிழக அரசை முடக்குகிற ஆளுநரை தமிழக முதல்வர் சந்திப்பதால் என்ன பயன் ஏற்படப் போகிறது என்பதை ஆளுநரின் ஊதுகுழலாக இருக்கிற அண்ணாமலை தெளிவுபடுத்த வேண்டும்.

பொதுவாக இன்றைக்குப் பாராளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதலும், அதையொட்டி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பென்ட் நடவடிக்கையும் அப்பட்டமான, ஜனநாயக விரோத செயலாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி, ஜனநாயகத்தில் ஒரு சர்வாதிகாரியைப் போலச் செயல்படுவதால் தான் பாராளுமன்றம் இத்தகைய தாக்குதலுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறது. இத்தகைய போக்குகள் இந்தியாவின் ஜனநாயகத்திற்கே கேலிக் கூத்தாகவும், அவமானமாகவும் அமைந்து விட்டது என்பதே ஜனநாயக உணர்வாளர்களின் கருத்தாக உள்ளது. இத்தகைய பேராபத்திலிருந்து இந்தியாவை மீட்பதற்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

தலைவர் திரு கே எஸ் அழகிரி