இதுவரை ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரண நிதிக்காக, பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பேரிடரை எதிர்கொள்ள உரிய நிதியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்குவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக தமிழ்நாட்டை வஞ்சிக்கிற வகையில் அவர் இன்று அறிவிப்பை வெளியிட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.- தலைவர் திரு கே எஸ் அழகிரி

23-Dec-2023

அறிக்கை

டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டம் கடுமையான மழையின் காரணமாக இதுவரை காணாத பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அதிலிருந்து மீட்பதற்காக தமிழக அரசு தீவிரமான பல நடவடிக்கைகள் எடுத்து மக்கள் இயல்பு நிலை மாறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. இந்த சூழலில் மறுபடியும், கடந்த 17, 18 ஆகிய இரண்டு நாட்களில் தென்மாவட்டங்கள் குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் கடுமையான மழையின் காரணமாக மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்பட்டதோடு விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. இதை மீட்பதற்குப் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. ஏறத்தாழ 10 அமைச்சர்கள், 15 ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரிகள் தீவிரமாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதை எதிர்கொள்வதற்குரிய நிவாரண நிதி கேட்பதற்காக தமிழக முதலமைச்சர் தலைநகர் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனு வழங்கியிருக்கிறார். அந்த கோரிக்கை மனுவில் ஏறத்தாழ தமிழக முதலமைச்சர் கேட்டது 21 ஆயிரம் கோடி ரூபாய். முதல் தவணையாக 2000 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார். இந்நிலையில் அவர் பாதிக்கப்பட்ட தென்மாவட்டப் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூழலில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் “தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்க முடியாது. தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. கூடுதல் சிறப்பு நிதி வழங்க முடியாது” என்று தமிழ்நாட்டின் மீது மிகுந்த வன்மத்தை வெளிப்படுத்துவது போன்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகும். கிட்டத்தட்டத் தேசிய பேரிடர் அறிவிக்க முடியாது என்று சொல்வதன் மூலமாக தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையை நிராகரித்து, தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்திருக்கிறார். பொதுவாக 450 கோடி ரூபாய் கொடுத்ததை பற்றி நிர்மலா சீதாராமன் கூறுகிறார். அது மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஏற்கனவே வழங்கப்பட்ட தொகையாகும். நாம் கேட்பது சிறப்பு நிதி. இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற பாதிப்பிலிருந்து தமிழக மக்களை மீட்பதற்காக நாம் கேட்கும் கோரிக்கையை நிராகரித்துவிட்டு, ஏற்கனவே நமக்கு வழங்கப்பட்ட தொகையை புதிதாக வெள்ள நிவாரண நிதியாகக் கொடுத்தது போன்று நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதை ஏற்க முடியாது.

இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிற செயலாகும். நம்மைப் பொறுத்தவரை மாநில பேரிடர் நிவாரண நிதி என்பது தமிழ்நாட்டிற்கென ஏற்கனவே ஒதுக்கப்பட்டது. நாம் கேட்பது தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு சிறப்பு நிதி. நாம் கேட்டிருக்கும் தொகையை அவர் வழங்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக இதுவரை ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரண நிதிக்காக, பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பேரிடரை எதிர்கொள்ள உரிய நிதியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்குவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக தமிழ்நாட்டை வஞ்சிக்கிற வகையில் அவர் இன்று அறிவிப்பை வெளியிட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நீண்ட காலமாகவே தமிழ்நாட்டு மக்கள் மீது மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருவதைத் தான் நிர்மலா சீதாராமன் அவர்களின் அறிவிப்பு வெளிப்படுத்துகிறது. இதை தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த வேதனையோடு எதிர்கொண்டு வருகிறார்கள். ஆனால் எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களைப் பாதிப்பிலிருந்து மீட்கும் முயற்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் வகையில் பேசியுள்ள நிர்மலா சீதாராமனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தலைவர் திரு கே எஸ் அழகிரி