இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தியா கூட்டணியால் அமைய இருக்கும் ஆட்சியில் அனைத்து கிறிஸ்துவ திருச்சபைகளுக்கும் அரசு அங்கீகாரம் அளித்து வழிபாட்டு சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு அளிக்கும் கோரிக்கையை முழுமனதோடு காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்கிறது. இந்த பின்னணியில் இந்திய கிறிஸ்துவ சங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு வருகிற மக்களவை தேர்தலில் தங்களது அமைப்புகளோடு இணைந்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.- தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

16-April-2024

அறிக்கை

இந்தியா முழுவதிலும் உள்ள பெந்தெகொஸ்தே மற்றும் சுயாதீன திருச்சபைகளின் ஆராதனை வழிபாட்டு உரிமைகள் பாதுகாக்கப்படவும், இந்திய கிறஸ்துவர்களின் அனைத்து விதமான உரிமைகள் மற்றும் திருச்சபைகளின் நலன்காக்க யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சேவை செய்ய இந்திய கிறிஸ்துவ சங்கம் உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. ஆனால், பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதற்கொண்டு இந்த அமைப்புகள் சுதந்திரமாக தனித்தன்மையுடன் செயல்பட இயலாத வகையில் வகுப்புவாத சக்திகளும், வன்முறை கும்பல்களும் அச்சுறுத்தி ஜெபவழிபாடு நடத்த முடியாமல் போதகர்கள் மற்றும் சபை மக்கள் தாக்கப்படுகிற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் பெந்தெகொஸ்தே சபைகள் ஏறத்தாழ 20,000 எண்ணிக்கையில் உள்ளது. இந்த எண்ணிக்கையில் பிற அங்கீகரிக்கப்பட்ட பிரதான சபைகள் உள்ளடக்காது. இதையும் சேர்த்தால் ஒட்டுமொத்தமாக 35,000 த்திற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத சபைகள் தமிழ்நாட்டில் இருக்கிறது.

இந்திய தேசிய காங்கிரஸ் வெளியிட்ட நியாய பத்திரம் தேர்தல் அறிக்கை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 15, 16, 25, 26, 28, 29, 30 ஆகியவற்றில் உறுதியளித்துள்ளபடி ஒவ்வொருவரின் நம்பிக்கையையும், மதச் சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள உறுதிகளையும், உரிமைகளையும் பாதுகாக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. பலவிதமான மதங்கள் இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கின்றன. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் விருப்பமான மதத்தை பின்பற்றுவது உட்பட மனித உரிமைகள் அனைத்தையும் பெறுவதற்கு சமமான உரிமை உடையவர்கள் ஆவார்கள். இவையனைத்தும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் தெளிவாக கூறப்பட்டுள்ளன.

இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தியா கூட்டணியால் அமைய இருக்கும் ஆட்சியில் அனைத்து கிறிஸ்துவ திருச்சபைகளுக்கும் அரசு அங்கீகாரம் அளித்து வழிபாட்டு சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு அளிக்கும் கோரிக்கையை முழுமனதோடு காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்கிறது. இந்த பின்னணியில் இந்திய கிறிஸ்துவ சங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு வருகிற மக்களவை தேர்தலில் தங்களது அமைப்புகளோடு இணைந்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

– தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.