நாளை காலை 7 மணி முதல் தொடங்குகிற வாக்குப் பதிவில் எவ்வளவு விரைவாக சென்று வாக்களிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக சென்று தவறாமல் உங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டுமென வாக்காள பெருமக்களை அன்போடு வேண்டுகிறேன். நீங்கள் அளிக்கிற ஒவ்வொரு வாக்கும் 140 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்கிற கடமை உணர்வோடு உங்கள் வாக்குகளை மிகுந்த பொறுப்புணர்வோடு அளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். – தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

18-April-2024

அறிக்கை

நாட்டில் இதுவரை நடைபெற்ற மக்களவை தேர்தல்களிலேயே மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக வருகிற மக்களவைத் தேர்தல் அமைந்திருக்கிறது. இது இந்தியாவின் எதிர்காலத்தையும், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் நிர்ணயிக்கப் போகிற தேர்தலாகும். இந்தியாவில் ஜனநாயகம் நீடிக்கப் போகிறதா ? சர்வாதிகாரம் நீடிக்கப் போகிறதா ? என்பது குறித்து வாக்காளப் பெருமக்கள் முடிவு செய்ய வேண்டிய தேர்தல். சுதந்திர இந்தியா காணாத வகையில் இந்திய அரசமைப்புச் சட்டம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. அதனை சீர்குலைத்து புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க பாரதிய ஜனதா கட்சி தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய பேராபத்துகளிலிருந்து நாட்டை மீட்க ஜனநாயக அடிப்படையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கிற வகையில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணியை அமைத்திருக்கின்றன.

கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் 2014, 2019 ஆகிய தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக, மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற அரசியலின் மூலம் வாக்கு வங்கியை உருவாக்கி பா.ஜ.க. வெற்றி பெற்று வருகிறது. ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார பேரழிவு காரணமாக நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், கடுமையான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, ரூபாயின் மதிப்பு குறைவு, சீரழிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம், தொழிலாளர்களின் உரிமைப் பறிப்பு, மதச்சார்பற்ற கொள்கைக்கு அச்சுறுத்தல், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியல், பட்டியலின மக்களின் மீதான தாக்குதல், மாநில உரிமைகள் பறிப்பு போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளின் காரணமாக பா.ஜ.க. ஆட்சியை அகற்றுகிற வகையில் மக்கள் முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இதுவரை இழந்தது போதும், இனி எதையும் இழக்க முடியாது. இந்திய ஜனநாயகத்தையும், இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டிய ஜனநாயக கடமை வாக்காளப் பெருமக்களுக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது.

இந்தியா முழுவதும் பா.ஜ.க. எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கிறது. வடமாநிலங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது என்ற நிலையில் 9 முறை தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை நிகழ்த்த வேண்டிய பலகீனமான நிலையில் பிரதமர் மோடி இருக்கிறார். ஆனால், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத அளவிற்கு மோடி எதிர்ப்பு அலை உருவாகியிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் அனைத்து நிலைகளிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.க.வின் தென்மாநிலங்கள் புறக்கணிப்பு அரசியலில் தமிழகம் கடுமையாக வஞ்சிக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் வரி வருவாயிலும், ஜி.எஸ்.டி. வரி பகிர்விலும் தமிழ்நாட்டின் பங்கு கடுமையாக குறைக்கப்பட்டு வருகிறது. வெள்ள நிவாரண நிதி மறுக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடராக கருத முடியாது என்று ஒன்றிய நிதியமைச்சர் அறிவித்ததை எவரும் மறக்க முடியாது. நிவாரண நிதியாக கேட்ட ரூபாய் 37,000 கோடியில் சல்லிக்காசு கூட வழங்கவில்லை. தொடர்ந்து நீட் தேர்வு திணிக்கப்பட்டு வருகிறது. தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டு மக்கள் மீது தலைவர் ராகுல்காந்தி அளவற்ற அன்பையும், பாசத்தையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை மதிக்கிறார். அதற்காக உரிமைக் குரல் எழுப்பி வருகிறார். தமிழ்நாட்டு மக்கள் மீது அவர் கொண்டிருக்கிற அன்பு என்பது உண்மையானது, உணர்வுபூர்வமானது. பிரதமர் மோடி வைத்திருப்பதாக கூறப்படுகிற அன்பில் உண்மையில்லை. இதனை தேர்தலுக்கான இரட்டை வேடம் என்பதை மக்கள் மிக நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் மோடியின் கபட நாடகத்திற்கு இரையாக மாட்டார்கள்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்ட நியாய பத்திரம் என்ற தேர்தல் அறிக்கையில் சமூகநீதி, பெண்களுக்கான சமஉரிமை, சமவாய்ப்பு, விவசாயிகள் நலன், சிறுபான்மையினர் பாதுகாப்பு, மாநில உரிமைகள், கருத்து சுதந்திரம், மீனவர் நலன், கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து, 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூபாய் 400 ஆக உயர்வு, சாதிவாரி கணக்கெடுப்பு, அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு, பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 1 லட்சம் வழங்குகிற மகாலட்சுமி திட்டம், மீனவர்களுக்கு மீண்டும் டீசல் மானியம், 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மதிய உணவு, மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் மீண்டும் கட்டணச் சலுகை, நாடு முழுவதும் ஒன்றிய அரசு பணியிடங்களில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், விவசாயிகளுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவுப்படி சட்டப் பாதுகாப்பு என மக்கள் நலன் சார்ந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

எனவே, இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க, இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க, மோடியின் பாசிச, சர்வாதிகார ஆட்சியை வீழ்த்திட, இந்தியா கூட்டணி தலைமையில் ஜனநாயக ஆட்சி மீண்டும் மலர்ந்திட, மக்கள் நலன்சார்ந்த நல்லாட்சி அமைந்திட காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெறுகிற வகையில் உங்கள் ஆதரவை வழங்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நாளை காலை 7 மணி முதல் தொடங்குகிற வாக்குப் பதிவில் எவ்வளவு விரைவாக சென்று வாக்களிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக சென்று தவறாமல் உங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டுமென வாக்காள பெருமக்களை அன்போடு வேண்டுகிறேன். நீங்கள் அளிக்கிற ஒவ்வொரு வாக்கும் 140 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்கிற கடமை உணர்வோடு உங்கள் வாக்குகளை மிகுந்த பொறுப்புணர்வோடு அளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

– தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.