இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்கிற வகையில் அமைதியான முறையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குச்சாவடிகளுக்கு வருகை புரிந்து வாக்கினை அளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழக வாக்காள பெருமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

22-April-2024

அறிக்கை

இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் 2024 மக்களவை தேர்தலின் முதல்கட்டமாக தமிழகத்தில் அமைதியாக 70 சதவிகித வாக்குப்பதிவுடன் நடந்து முடிந்திருக்கிறது. ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையே நடைபெற்ற தேர்தலில் தமிழக மக்கள் பெருவாரியாக இந்தியா கூட்டணியை ஆதரிக்கிற வகையில் வாக்களித்திருக்கிறார்கள் என்ற உறுதியான செய்தி மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து செயல்பட்ட பெருமை தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு. இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் கொள்கை சார்ந்து வகுப்புவாத சக்திகளை வீழ்த்த வேண்டுமென்ற நோக்கத்தில் கடுமையான பரப்புரையை மேற்கொண்டனர்.

இந்தியா கூட்டணிக்கு பொதுவான நோக்கமும், இலக்கும் இருந்தது. தமிழ்நாட்டின் உரிமைகளையும், நலன்களையும் கடந்த 10 ஆண்டுகளாக பறித்து வந்த பா.ஜ.க. ஆட்சிக்கு உரிய பாடத்தை புகட்டுகிற வகையில் இந்தியா கூட்டணியின் பரப்புரையை திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளிலும் திட்டமிட்டு மேற்கொண்ட கடுமையான பரப்புரை நிகழ்த்தியதால் ‘நாற்பதும் நமதே, நாளை நமதே, நாடும் நமதே” என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. நாள்தோறும் தொடர்பு கொண்டு தொகுதி நிலவரங்களை அறிந்து வெற்றியை உறுதிபடுத்துவதற்கான அனைத்து ஆலோசனைகளையும் வழங்கி வந்ததை நன்றியோடு நினைவுகூற விரும்புகிறேன். நாற்பது தொகுதிகளிலும் அவரே வேட்பாளராக நிற்பதாக கருதி, வெற்றி வாய்ப்பிற்கான அனைத்து முயற்சிகளையும் கூட்டணி கட்சித் தலைவர்களோடு பகிர்ந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சிக்கும், பாராட்டுக்கும் உரியது.

கூட்டணி கட்சிகளிடையே நல்லிணக்கத்தையும், ஆரோக்கியமான செயல்பாடுகளையும் உருவாக்கி, வகுப்புவாத சக்திகளை வீழ்த்துவதில் மிகப்பெரிய வெற்றியை பெறுகிற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் இந்தியா கூட்டணியின் தமிழக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்ட தொண்டர்களுக்கும் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவிக்க விரும்புகிறேன். தலைவர் ராகுல்காந்தி அவர்களின் பரப்புரையில் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று இருவரும் ஆற்றிய உரைகள் தமிழக மக்களிடையே பெரும் மாற்றத்தையும், எழுச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் தமிழகத்தில் மேற்கொண்ட பரப்புரை மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. இவர்களது பங்களிப்பை தமிழக மக்கள் வரவேற்றதோடு, இந்தியா கூட்டணிக்கு அமோக ஆதரவு வழங்கி மக்கள் விரோத ஆட்சி நடத்திய பிரதமர் மோடிக்கு உரிய பாடத்தை புகட்டுகிற வகையில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. தமிழகத்தில் இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதி செய்கிற வகையில் பரப்புரை மேற்கொள்வதற்காக வருகை புரிந்த திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கும், தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்கிற வகையில் அமைதியான முறையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குச்சாவடிகளுக்கு வருகை புரிந்து வாக்கினை அளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழக வாக்காள பெருமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

– தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.