நீட் தேர்வுக்கு ஆதரவாகப் பகிரங்கமாகச் செயல்படுகிற ஒரே கட்சியான தமிழக பா.ஜ.க.விற்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் உரிய பாடத்தைப் புகட்ட வேண்டும். அதன்மூலம் தமிழக பா.ஜ.க.வின் ஆணவ அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 17 Feb 2022

தமிழகத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடுகிற வேட்பாளர்கள் அமோக வெற்றியைப் பெறுகிற அளவிற்கு வாக்காளர்கள் ஆதரவு அளிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். கடந்த மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றியை வழங்கினீர்கள். அடுத்து, சட்டமன்றத் தேர்தலிலும் அமோக ஆதரவு வழங்கி பத்தாண்டு கால மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு தமிழகத்தில் நல்லாட்சி அமைகிற வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். அதைத் தொடர்ந்து ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை வழங்கினீர்கள். இறுதியாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் வரலாறு காணாத வெற்றியை வழங்குவீர்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., தனித்தனியாகப் பிரிந்து போட்டியிடுகின்றன. கடந்த தேர்தலில் கொள்கை பேசியவர்கள் தனித்தனியாகப் பிரிந்து கிடக்கிறார்கள்.  எந்த கொள்கையும் இல்லாத சந்தர்ப்ப வாதிகளாக இருப்பதால் இவர்களால் கூட்டணி அமைக்க முடியவில்லை. ஆனால், தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஒரு கொள்கை சார்ந்த கூட்டணி. தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்த கூட்டணி. மத்தியில் பிரதமர் மோடி ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு விரோதமாக எடுக்கப்படுகிற நடவடிக்கைகளைக் கடுமையாக எதிர்க்கிற கூட்டணி. எனவே, தமிழக மக்களின் நலனில் அக்கறையுள்ள கூட்டணியாக விளங்குவதால் மக்கள் ஆதரவு தொடர்ந்து கிடைத்து வருகிறது.

மத்தியில் நடைபெற்று வரும் பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டிற்கு விரோதமாகப் பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. சமூக நீதிக்கு எதிராக அநீதி இழைத்து வருகிறது. நீட் தேர்வுக்கு எதிராகக் கடந்த 2016 முதல் சட்டப்பேரவையில் நான்குமுறை மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க. ஆட்சி நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றியதே தவிர, ஒப்புதலைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினாலும், மறுபடியும் சட்டப் பேரவையைக் கூட்டி நீட் மசோதாவை ஆளுநருக்குத் திரும்ப அனுப்பியிருக்கிறோம். அரசமைப்புச் சட்டப்படி அமைச்சரவைக் குழுவின் உதவி மற்றும் அறிவுரையின்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும். அதற்கு மாறாக தன்னிச்சையாகச் செயல்பட முடியாது. சட்டசபையின் இறையாண்மையில் மக்களின் இறையாண்மை அடங்கியிருக்கிறது. சட்டப் பேரவையின் விருப்பத்திற்கு எதிராகக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநர் செயல்பட முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு எதிராக நியமன முறையில் பதவிக்கு வந்த ஆளுநர் செயல்படுவதற்கு அரசமைப்புச் சட்டம் அனுமதிக்காது.

இந்நிலையில் நீட் தேர்விற்கு விலக்கு பெற்று தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவக் கனவை நிறைவு செய்வதற்காக தமிழக அரசு சமூக நீதிக்காகப் போராடி வருகிறது. ஆனால், சமூக நீதிக்கு எதிராக பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு ஆதரவாகப் பகிரங்கமாகச் செயல்படுகிற ஒரே கட்சியான தமிழக பா.ஜ.க.விற்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் உரிய பாடத்தைப் புகட்ட வேண்டும். அதன்மூலம் தமிழக பா.ஜ.க.வின் ஆணவ அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த தேர்தலில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். கடந்த மே 7 ஆம் தேதி ஆட்சியில் அமர்ந்த அன்றே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஐந்து கோப்புகளில் கையொப்பமிட்டவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அதன்மூலம் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு தவணைகளில் 4 ஆயிரம் ரூபாய், பால் விலையில் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி சாதனை படைத்திருக்கிறார். தமிழகத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த கொரோனா தொற்று தற்போது வேகமாகக் குறைந்து வருகிறது. கொரோனா பரிசோதனையே தேவையில்லாத ஒன்றாக மாறுகிற சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய பா.ஜ.க. அரசின் பாரபட்சமான தடுப்பூசி விநியோகத்தையும் மீறி கொரோனா தடுப்பூசி முதல் தவணை 92 சதவிகிதப் பேருக்கும், இரண்டாவது தவணை 72 சதவிகிதப் பேருக்கும் செலுத்தப்பட்டு மக்கள் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள்.

எட்டு மாத ஆட்சியில் எண்ணற்ற சாதனைகள் நிகழ்ந்திருக்கின்றன. தமிழக பா.ஜ.க.வினர் தமிழக அரசை இந்துக்களுக்கு எதிரான அரசாக அவதூறுப் பிரச்சாரம் செய்து வந்தார்கள். அதற்காக வேல் யாத்திரை நடத்தினார்கள். ஆனால், கோயில் நில ஆக்கிரமிப்புகளிலிருந்த 1,780 கோடி ரூபாய் மதிப்புள்ள 180 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதைவிட இந்து மத ஆதரவு நடவடிக்கை வேறு என்ன இருக்க முடியும் ? அதேபோல, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வாய்ப்புகள், இல்லம் தேடி கல்வி, மருத்துவம் என சாதனைகளின் பட்டியல் நீண்டு கொண்டே வருகிறது. சேதமடைந்த 180 மீனவர்களின் படகுகளுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு, கொரோனாவினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் ஐந்து லட்சம் ரூபாய் வைப்புத் தொகை என மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு வழங்குவதாக வாக்குறுதி கொடுக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். பத்து ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சி மலையளவுக்கு 6 லட்சம் கோடி ரூபாய்  கடனை சுமத்திச் சென்ற நிலையில் தான் இத்தகைய சாதனைகள்  நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

எனவே, அமைதிப்பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி செய்து வரும் பா.ஜ.க.விற்கும், பத்து ஆண்டுகால மக்கள் விரோத, அராஜக ஊழல் ஆட்சி நடத்திய அ.தி.மு.க.விற்கும் பாடம் புகட்டுகிற வகையில் தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு அவரவர் கட்சி சின்னங்களில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டுமென தமிழக வாக்காளப் பெருமக்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலம் தமிழக ஆட்சியில் நிறைவேற்றப்படுகிற மக்கள் நலத் திட்டங்கள் ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக மக்கள் பயனடைகிற வாய்ப்பு உறுதி செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களவையில் சமீபத்தில் தலைவர் ராகுல்காந்தி கூறியபடி, தமிழ்நாட்டில் பா.ஜ.க. நுழைய முடியாது என்பதை வாக்காளர்கள் நிச்சயம் உறுதி செய்வார்கள்.

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் உடன்பாட்டிற்கு எதிராகப் போட்டியிடுகிற காங்கிரஸ் வேட்பாளர்கள் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

கே எஸ் அழகிரி