அறிக்கை | 18 May 2022
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்.
கொலை செய்தவர்கள் தமிழர்கள். அவர்கள் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். அதற்காக அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று சிலர் கூறுகிறார்கள். பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலை செய்யப்படாமலேயே இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்கிற குரல் ஏன் எழவில்லை ? அவர்களெல்லாம் தமிழர்கள் இல்லையா ? ராஜிவை கொலை செய்தவர்கள் மட்டும் தான் தமிழர்களா ? தமிழ் உணர்வு உள்ளவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும்.
நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் நாளை (19.5.2022) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு ‘வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது’ என்று எழுதிய பதாகையை கையில் பிடித்துக் கொண்டு காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை அறப்போராட்டம் நடத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
கே.எஸ். அழகிரி