இந்தியாவை பொருளாதார வல்லரசாக உயர்த்துவேன் என்று மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டின் அடிப்படையில் பேசுகிற பிரதமர் மோடியின் ஆட்சியில், எவ்வாறு மக்களின் வாழ்க்கை தரமும், மனிதவளமும் குன்றி வறுமையின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதை ஐ.நா. சபையின் தரவரிசை பட்டியல் அம்பலப்படுத்தியிருக்கிறது. எந்த புள்ளி விவரத்தையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிற பா.ஜ.க.வினர், ஐ.நா. சபை ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கைக்கு என்ன பதில் கூறப் போகிறார்கள் ? மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, வாக்கு வங்கியை விரிவுபடுத்தி தேர்தலில் வெற்றி பெறுவதை நோக்கமாக கொண்ட ஆர்.எஸ்.எஸ். வழிவந்த பா.ஜ.க.விற்கு மக்களின் உண்மையான வளர்ச்சி மீது அக்கறையில்லை என்பதையே ஐ.நா. சபையின் புள்ளி விவரம் சுட்டிக் காட்டுகிறது. இத்தகைய அவலநிலை நீடிக்குமேயானால், பா.ஜ.க. ஆட்சியாளர்கள் நாட்டு மக்களின் கடும் கோபத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன். – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

18-Oct-2024

அறிக்கை

கடந்த 2014, 2019 மக்களவை தேர்தல் பரப்புரைகளின் போது, 2024 ஆம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரத்தை 5 டிரில்லியன் கோடி டாலராக உயர்த்துவதோடு, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தை இரட்டை இலக்கில் உறுதி செய்வோம் என்று பிரதமர் மோடி வாக்குறுதி வழங்கினார். கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் அவர் கொடுத்த வாக்குறுதியின்படி இந்தியாவில் வளர்ச்சி ஏற்படவில்லை. தற்போது உலக நாடுகளில் இந்திய பொருளாதாரம் ஐந்தாவது இடத்தில் இருப்பதாகவும், அதை மூன்றாவது இடத்திற்கு கொண்டு வருவோம் என்றும் பேசி வருகிறார். ஆனால், அவரது கருப்பு பண ஒழிப்பு, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் கடும் தோல்வியை சந்தித்தன. மோடி ஆட்சியில் 90,000 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிகளில் மோசடி நடந்து, வாராக்கடன்கள் 24 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. மோடியின் கனவு நிறைவேறாத நிலையில் இந்திய பொருளாதாரம் பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியை பற்றி பேசுகிற மோடி, தனிநபர் வருமானம் ரூபாய் 1 லட்சத்து 80 ஆயிரமாக குறைந்திருப்பதைப் பற்றி பேசுவதே இல்லை. இதன் காரணமாக தனிநபர் வருமான அடிப்படையில் உலக நாடுகளின் வரிசையில் இந்தியா 138-வது இடத்தில் தான் இருக்கிறது. மோடி ஆட்சியில் விரல் விட்டு எண்ணக்கூடிய அதானி, அம்பானி உள்ளிட்ட சில கார்ப்பரேட்டுகளின் வருமானத்தில் தான் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதே தவிர, அனைவரையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த வளர்ச்சி ஏற்படவில்லை. ஆனால், 2014 முதல் 2024 வரை ஒன்றிய அரசின் மொத்த கடன் ரூபாய் 183 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 87 சதவிகிதமாகும். இதுதான் மோடியின் பொருளாதார புரட்சியா?
பா.ஜ.க. ஆட்சியில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டு விட்டதாக மோடி திரும்பத் திரும்ப தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். உண்மை நிலையை ஆராய்ந்து பார்த்தால் பசி, பட்டிணியின் கோரப் பிடியில் இந்திய மக்கள் சிக்கிக் கொண்டிருப்பதை உணர முடியும். சமீபத்தில் வெளியிடப்பட்ட, உலக பட்டிணி குறியீடு தரவரிசை பட்டியலை ஆய்வு செய்ததில் 127 நாடுகளில் 105-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. உலக நாடுகளில் பசியின் அளவை அளவிடுவதற்கும், கண்காணிப்பதற்குமான கருவியாக ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை இறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உலக பட்டிணி குறியீடு தர வரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த அறிக்கையின்படி, இந்திய மக்கள் தொகையில் 13.7 சதவிகிதம் பேர் ஊட்டச் சத்து குறைபாட்டுடன் உள்ளனர். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 36.5 சதவிகிதம் பேர் வளர்ச்சி குன்றியவர்களாகவும், இவர்களில் 18.7 சதவிகிதம் பேர் எடை குறைந்தவர்களாகவும் உள்ளனர். மேலும் 2.9 சதவிகித குழந்தைகள் 5 வயது நிறைவதற்கு முன்பாகவே இறந்து விடுகின்றனர். உலக பட்டிணி குறியீட்டின் கடைசி ஐந்து இடங்களில் சோமாலியாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இருப்பதைவிட வேறு அவமானம் இருக்க முடியாது. ஆனால் மோடி இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதாக தெரியவில்லை.
மேலும், ஐ.நா. வளர்ச்சி திட்டத்தின் மூலம் தற்போது வெளியிடப்பட்டுள்ள மனித வளர்ச்சி குறியீட்டு அறிக்கை மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. அதன்படி, இந்தியா தர வரிசை பட்டியலில் 193 நாடுகளில் 134-வது இடத்தில் இருப்பதை இந்தியாவின் மனித வளத்தின் மதிப்பீட்டை ஆய்வு செய்து அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்த அறிக்கையின்படி, 140 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் மனித வளர்ச்சி குறியீட்டில் எந்த அளவுக்கு உலக நாடுகளின் வரிசையில் பின்தங்கியுள்ளோம் என்பதை பார்க்கிற போது, பிரதமர் மோடியின் பேச்சுக்கும், செயலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உணர முடிகிறது. மலேசியா 63-வது இடத்திலும், தாய்லாந்து 66, சீனா 75, இலங்கை 78, இந்தோனேஷியா 112, அண்டை நாடுகளான பூடான் 125, வங்கதேசம் 129-வது இடங்களிலும் இருப்பதைக் கண்டு பா.ஜ.க. ஆட்சியாளர்கள் என்ன பதில் கூறப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
எனவே, இந்தியாவை பொருளாதார வல்லரசாக உயர்த்துவேன் என்று மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டின் அடிப்படையில் பேசுகிற பிரதமர் மோடியின் ஆட்சியில், எவ்வாறு மக்களின் வாழ்க்கை தரமும், மனிதவளமும் குன்றி வறுமையின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதை ஐ.நா. சபையின் தரவரிசை பட்டியல் அம்பலப்படுத்தியிருக்கிறது. எந்த புள்ளி விவரத்தையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிற பா.ஜ.க.வினர், ஐ.நா. சபை ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கைக்கு என்ன பதில் கூறப் போகிறார்கள் ? மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, வாக்கு வங்கியை விரிவுபடுத்தி தேர்தலில் வெற்றி பெறுவதை நோக்கமாக கொண்ட ஆர்.எஸ்.எஸ். வழிவந்த பா.ஜ.க.விற்கு மக்களின் உண்மையான வளர்ச்சி மீது அக்கறையில்லை என்பதையே ஐ.நா. சபையின் புள்ளி விவரம் சுட்டிக் காட்டுகிறது. இத்தகைய அவலநிலை நீடிக்குமேயானால், பா.ஜ.க. ஆட்சியாளர்கள் நாட்டு மக்களின் கடும் கோபத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

– தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.