18 Sep 2021 அறிக்கை
2014 மக்களவை தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றி விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு உரிய விலை வழங்குவோம், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக கூட்டுவோம் என்று வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி அவர்கள், இதில் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. இதற்கு மாறாக, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கிற வகையில் மூன்று வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறார்.
விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு முன்பாக விவசாய சங்கங்களையோ, விவசாயிகளையோ, எதிர்கட்சித் தலைவர்களையோ கலந்து பேசாமல், தன்னிச்சையாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதை எதிர்த்து கடந்த 10 மாதங்களாக தலைநகர் தில்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராடுகிற விவசாய சங்கங்களை இதுவரை அழைத்து பேசுவதற்கு பிரதமர் மோடி தயாராக இல்லை. இதன்மூலம் விவசாயிகள் மீது பிரதமர் மோடி எந்த அளவிற்கு கடுமையான மனநிலையோடு இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. மேலும், மூன்று வேளாண் சட்டங்களும் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகத் தான் கொண்டு வரப்பட்டது என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆனால், விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை பறிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுகிற வரையில் எங்கள் போராட்டம் ஓயாது என்ற நெஞ்சுறுதியோடு தலைநகர் தில்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக விவசாயிகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறது. அந்த வகையில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தமிழக காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கோரியுள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மறுக்கிற மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி முழு அடைப்பிற்கு அறைகூவல் விடுத்துள்ளது. அனைத்து மக்களின் நலனுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கைகள் வெற்றி பெறுவதற்கு துணைபுரிய வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. அந்த வகையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி நடத்துகிற முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த காங்கிரஸ் கட்சியினரும், பொதுமக்களும் பெரும் துணையாக இருந்து ஆதரிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
கே.எஸ். அழகிரி