21 Sep 2021 அறிக்கை
இந்தியாவிற்கே முன் மாதிரியாக அமைதிப் பூங்காவாக விளங்குகிற தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கிற வகையில் சில சமூக விரோதிகளின் செயல்பாடுகள் பல்வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. யோகக் குடில் சிவயோகி சிவகுமார் என்ற நபர் பொது வெளியிலும், வலைதள பதிவுகளிலும் இழிவான ஆபாச வார்த்தைகளை பேசி வன்மையான கருத்துகளை பகிர்ந்துள்ளார். இதில், இஸ்லாமியர்களைப் பற்றியும், அவர்களால் வணங்கப்படுகிற இறை தூதர் முகமது நபி அவர்களைப் பற்றியும், அவர்களின் தொழுகை முறைகளைப் பற்றியும் அநாகரீகமாக விமர்சித்துப் பேசி, அதை வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து, காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டு சிவகுமார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட சிவகுமாரை காலதாமதமின்றி கைது நடவடிக்கையை மேற்கொண்ட காவல்துறையினரை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம். அதேநேரத்தில், மிகமிக கேவலமாக இஸ்லாமிய சமுதாயத்தினர் புண்படுகிற வகையில் கருத்துகளை சமூக ஊடகங்களில் பரப்புகிற வகையில் தொடர்ந்து செயல்படுகிற சிவகுமார் போன்ற சமூக விரோத சக்திகளை காவல்துறை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
மேலும், சிவகுமார் பின்னணி மற்றும் தொடர்புகள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். மதநல்லிணக்கத்திற்கு உலை வைக்கின்ற வகையில் கருத்துகளை வெளியிடுகிற சிவகுமார் போன்ற சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
கே.எஸ். அழகிரி