அறிக்கை | 19 Mar 2022
தி.மு.க. தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அறிக்கையிலும், பரப்புரையிலும் கொடுத்த வாக்குறுதிகளின்படி வேளாண்மைக்கான முதல் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது. தனி பட்ஜெட் மூலம் வேளாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. வேளாண்மைக்கென மொத்தம் ரூபாய் 33,007 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு விவசாயிகள் நலன்சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய்கள் சீரமைக்காததால் தேவைப்படுகிற நீருக்கு அதிகமாக சாகுபடிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை சரி செய்கிற வகையில் ரூபாய் 80 கோடி ஒதுக்கப்பட்டு, கால்வாய் சீரமைப்புப் பணிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலவச தென்னங்கன்று வழங்க ரூபாய் 300 கோடியும், சொட்டு நீர்ப் பாசனத்திற்கு ரூபாய் 960 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் புறக்கணிக்கப்பட்ட 50 உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூபாய் 15 கோடியும், புதிதாக உழவர் சந்தைகள் உருவாக்க ரூபாய் 10 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. விவசாயிகள் உற்பத்தி செய்கிற விளை பொருட்களை விவசாயிகளே உழவர் சந்தைகள் மூலம் விற்பனை செய்து நியாயமான விலை பெறுவதற்கான வாய்ப்பு மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. தென்னை, மா, கொய்யா, வாழை உள்ளிட்டவை பயிரிடும் விவசாயிகளை ஊக்கப்படுத்துகிற வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஊரக வளர்ச்சித்துறை வாயிலாக பண்ணைக் குட்டைகள் அமைப்பதன் மூலம் நீராதார வளங்கள் பெருகுகிற சூழல் உருவாகியுள்ளது. அதேபோல தடுப்பணைகள் மற்றும் தூர்வாரும் பணிகளுக்கு ரூபாய் 1245 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது நீர்ப்பாசன பரப்பை அதிகப்படுத்துவதற்கு பேருதவியாக இருக்கும்.
கரும்பு விவசாயிகளுக்கு கடந்த காலங்களில் மத்திய – மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். கரும்பு சாகுபடி பரப்பும் பெருமளவு குறைய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை புரிந்து கொண்ட தமிழக அரசு விவசாய நிதிநிலை அறிக்கையின் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூபாய் 195 வழங்கப்படுவதை வரவேற்கிறேன்.
விவசாயத்தில் இளைஞர்களை ஈடுபடுத்துகிற வகையில் 2500 நபர்களுக்கு விவசாயத் திறன் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூபாய் 400 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. பாரம்பரிய நெல் வகைகள் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு 59 மெட்ரிக் டன் விதைநெல் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பாரம்பரிய நெல் உற்பத்தி பெருகி, மக்களின் உணவு முறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ரூபாய் 381 கோடியில் மூன்று உணவு பூங்காக்கள் அமைய உள்ளது. தமிழக அரசின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஏறத்தாழ 10 லட்சம் விவசாயிகள் நடப்பாண்டில் பயனடைந்துள்ளனர். நெல் சாகுபடி இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது மிகப்பெரிய சாதனையாகும். குறுவை சாகுபடியால் டெல்டா விவசாயிகளின் வருமானம் உயர்ந்துள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வரலாற்றுச் சாதனையாகும்.
முதல் வேளாண்மை பட்ஜெட்டின் மூலம் 86 அறிவிப்புகளுக்கு 80-க்கு அரசானை வெளியிட்டு, சொன்னதை செய்கிற அரசாக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் தலைமையிலுள்ள தமிழக அரசு செயல்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்கிற வகையில் முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு விவசாயிகளுக்கென தனி நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்த வேளாண்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களை பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
கே.எஸ். அழகிரி