கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்தது முதற்கொண்டு இந்தி, சமஸ்கிருத திணிப்பு என்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சிகளுக்கு இந்தி பேசாத மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஆயுள் காப்பீட்டுக் கழக இணைய தள முகப்பை இந்தி மயமாக்கியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும்.- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

19-Nov-2024

அறிக்கை

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்தது முதற்கொண்டு இந்தி, சமஸ்கிருத திணிப்பு என்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சிகளுக்கு இந்தி பேசாத மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஆயுள் காப்பீட்டுக் கழக இணைய தள முகப்பை இந்தி மயமாக்கியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். ஏற்கனவே, ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம், அஞ்சல்துறை, தகவல் தொடர்புத்துறை, ரயில்வே துறை என அனைத்து துறைகளிலும் இந்தி திணிப்பு நடைபெற்று வருவதை கடுமையாக எதிர்த்து வருகிறோம்.
இந்தி பேசாத மக்களுக்கு, இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித நேரு அவர்கள் கொடுத்த உறுதிமொழிக்கும், அதனைத் தொடர்ந்து பிறகு பிரதமராக வந்த லால்பகதூர் சாஸ்திரி, அன்னை இந்திரா காந்தி ஆகியோர் ஆட்சிமொழிச் சட்டத்தில் கொண்டு வந்த திருத்தத்தின் மூலமாகவும் இந்தி பேசாத மக்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதையெல்லாம் மீறுகிற வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் இணையதள முகப்பில் இந்தி மொழி திணிக்கப்பட்டிருப்பதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதுபோன்ற முயற்சிகளை தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய இந்தி திணிப்பு முயற்சிகளை கடுமையாக கண்டிக்கிறேன்.
எனவே, பிரதமர் மோடி இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு இந்தி திணிப்பை தடுக்கின்ற வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ