அறிக்கை 21-Mar-2023
தமிழகத்தில் மூன்றாவது முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, நிதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை உணவு தானிய உற்பத்தியில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து தன்னிறைவு பெறுகிற நிலை இருக்கிறது. கிராமங்கள் தன்னிறைவு பெற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் ஐந்து மாவட்டங்களில் சிறுதானிய மண்டலங்கள் விரிவாக்கம் செய்யப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.
கடந்த ஆட்சிக் காலங்களில் விவசாயிகள் மின் இணைப்பு பெறுவதற்கு பல ஆண்டுகள் காத்திருந்த அவலநிலை மாறி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது. வறட்சி, வெள்ள பாதிப்புகளை சமாளிக்க அதற்குரிய பயிர் ரகங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் பண்பாட்டின் நினைவாக இருக்கிற பனை மரங்களை அதிகரிக்க 10 லட்சம் விதைகள் விநியோகிக்க பனை மேம்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 15 லட்சம் தென்னங்கன்றுகள் 2500 கிராமங்களில் இலவச விநியோகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூபாய் 82 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
நெற்பயிரில் மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ரூபாய் 5 லட்சம் வழங்கும் திட்டத்தை சிறுதானியங்கள், பயிர் வகைகள், எண்ணெய் வித்துக்கள் சாகுபடியில் சாதனை புரிபவர்களுக்கு இத்தொகை வழங்குவது விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. கரும்பு விவசாயிகளுக்கு ஆதாய விலையான டன் ஒன்றுக்கு ரூபாய் 2821-க்கு கூடுதலாக தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூபாய் 195 வழங்கப்படும் என்ற அறிவிப்பு கரும்பு உற்பத்தியை பெருக்க பெருமளவில் உதவக் கூடியதாகும்.
தமிழகத்தில் பல பகுதிகளில் பலவிதமான விவசாய சாகுபடிகள் நடைபெற்று வருகின்றன. பண்ருட்டி பலாவிற்கு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில் அதை பல மாவட்டங்களில் விரிவுபடுத்தி 2500 ஹெக்டேரில் சாகுபடி செய்ய பலா இயக்கம் நடத்திட ரூபாய் 3 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, மிளகாய் மண்டலம், முருங்கை இயக்கம் என்ற திட்டங்களின் மூலம் சாகுபடி பரப்பை அதிகரித்து உற்பத்தியை பெருக்க நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு இருக்கிற சூழலில் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதை எதிர்கொள்கிற வகையில் நுண்ணீர் பாசனத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கிராமங்களில் பழச் செடி தொகுப்பு வழங்குவதற்கான திட்டமும், முந்திரி சாகுபடிக்கு ஊக்கமும், தேனி மாவட்டத்தில் வாழை சாகுபடியை ஊக்கப்படுத்த வாழை தனித் தொகுப்பு திட்டத்திற்கு ரூபாய் 130 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
விவசாயிகள் இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்படுகிற போது, அதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் பயிர் காப்பீடு திட்டத்திற்கு ரூபாய் 2337 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. பயிர் சாகுபடி சந்தேகங்களை விவசாயிகள் கேட்டு தெளிவு பெற வட்டாரத்திற்கு ஒரு விஞ்ஞானி நியமனம் செய்வது மிகுந்த வரவேற்புக்குரியதாகும். தகவல் தொடர்பில்லாத கிராமப்புற விவசாயிகள் நவீன முறையில் சாகுபடி செய்ய இத்திட்டம் பெரும் உதவியாக இருக்கும். தமிழகத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க ரூபாய் 50 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகள் உற்பத்தி செய்கிற உணவு தானியங்களை சந்தையில் விற்பனை செய்து, நியாய விலை பெறுவதற்கு இத்திட்டம் உதவியாக இருக்கும்.
தமிழகத்தில் வேளாண் துறையில் சாகுபடி பரப்பை விரிவுபடுத்தி, உற்பத்தியை பெருக்குகிற நோக்கத்தில் பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை அறிவித்த வேளாண் அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களை மனதார பாராட்டுகிறேன். வேளாண் துறைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றி சாதனை படைத்து வருகிற தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.
கே.எஸ். அழகிரி