தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ்கிற தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் யுகாதி பண்டிகை நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்த்து செய்தி 21-Mar-2023

தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி பேசுகிற, மொழி சிறுபான்மையினர்கள் பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள். தமிழ் மக்களோடு இரண்டறக் கலந்து தமிழை வாழ்வியல் மொழியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். சமீபகாலமாக மொழி சிறுபான்மையினர் மீது வெறுப்பை வளர்க்கிற வகையில்  சிலர் செயல்பட்டு வருவது மிகுந்த வேதனையைத் தருகிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் அமைக்கப்பட்டாலும், மொழி சிறுபான்மையினர் எவ்வித பேதமுமின்றி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், அதற்கு குந்தகம் விளைவிக்கிற வகையில் செயல்படுகிற தீய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு தமிழக அரசு ஒடுக்க வேண்டும். அதுவே மொழி சிறுபான்மையினருக்கு வழங்கப்படுகிற யுகாதி திருநாள் செய்தியாக இருக்க முடியும்.

யுகாதி திருநாளில் ஜாதி, மத, துவேஷம் கலைந்து மக்கள் நலன்சார்ந்த நல்லாட்சி தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம், இன்று யுகாதி பண்டிகை கொண்டாடும் மொழி சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பும், முக்கியத்துவமும் வழங்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ்கிற தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் யுகாதி பண்டிகை நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.எஸ். அழகிரி