21-Nov-2024
அறிக்கை
அமெரிக்க வழக்கறிஞர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதானியும் அவரது உறவினர் சாகர் அதானி உட்பட மொத்தம் 8 பேர் சேர்ந்து இந்திய அதிகாரிகள் 265 மில்லியன் டாலர் அளவுக்கு லஞ்சம் கொடுத்து சோலார் மின் திட்டங்களை பெற்றிருப்பது அம்பலமாகியிருக்கிறது. அதாவது, இந்திய மதிப்பு ரூ, 2,029 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்துள்ளனர். அவ்வாறு லஞ்சம் கொடுத்து பெறப்பட்ட சோலார் மின்திட்டங்களின் மூலம் அடுத்த 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் அளவுக்கு லாபம் ஈட்டக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதானியும், க்ரீன் எனர்ஜி அதிகாரி வினீத் ஜெயனும் சேர்ந்து அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சோலார் திட்டங்களை பெற்றதை மறைத்து, முதலீட்டாளர்களிடம் இருந்து கடனாகவும், பத்திரமாகவும் 3 பில்லியன் டாலர் அளவுக்கு வாங்கியுள்ளனர். இதில் அதானியின் உறவினர் சாகர் அதானி தான் லஞ்சம் கொடுக்கப்படுவதை தனது செல்பேசி மூலம் கண்காணித்து வந்துள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டு குறித்து அதானி நிறுவனம் பிரச்சனையை திசை திரும்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிற வேளையில், அதானி நிறுவன பங்குகள் 20 சதவீதம் வரை சரிந்துள்ளது. கௌதம் அதானியும், சாகர் அதானியும் அமெரிக்காவில் பங்கு சந்தையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தனது 16 வயதில் பள்ளிப்படிப்பை கைவிட்ட கௌதம் அதானி இன்றைக்கு இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற தகுதியை பிரதமர் மோடியின் ஆதரவினால் அடைந்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் அதாவது, 2014 இல் அதானியின் சொத்து மதிப்பு ரூ. 41,890 கோடியில் இருந்து 2023 இல் ரூ 8 லட்சத்து 45 ஆயிரம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இது ஏறத்தாழ 2029 சதவிகிதம் உயர்வாகும். உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் 609 வது இடத்தில் இருந்த அதானி 2023 இல் 13வது இடத்திற்கு உயர்ந்திருக்கிறார். இதுகுறித்து அதானி மீது குற்றச்சாட்டுகளை வெளியிட்ட அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் திரு ஜெய்ராம் ரமேஷ் இக்குற்றச்சாட்டு குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். இதன் மூலம் அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு என்ன தொடர்பு இருக்கிறது என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொள்கிற உரிமை இருக்கிறது. தம்மை மனிதப்புனிதராக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பிரதமர் மோடி, அமெரிக்க வழக்கறிஞர்கள் அமைப்பும், அமெரிக்க பங்குச்சந்தை ஆணையமும் உறுதி செய்துள்ள அதானி ஊழல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் ஆஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்து, ஜார்கண்டில் மின் உற்பத்தி செய்து வங்கதேசத்திற்கு அதானி குழுமம் விற்கிறது. இந்தியாவில் தற்போது மின்சாரத்தை விநியோகிக்கவும், அதானி குழுமத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனது நெருக்கமானவர்களுக்கு சலுகை வழங்குவதில் பிரதமர் மோடி மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகிறார். அதானி குழும நிறுவனத்திற்காக இந்தியாவில் ஏற்றுமதிக்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதி விதிகள் திருத்தத்தால் அதானி குழுமம் வங்கதேசத்திற்கு பதில், இந்தியாவிலேயே மின்சாரம் விற்க சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக மின்சாரம் விற்க முடியாததால் இந்தியாவில் விற்க அதானி குழுமத்திற்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் மோடி ஆட்சி அதானி அம்பானி உள்ளிட்ட சில கார்ப்பரேட்டுகள் சொத்து குவிப்பதற்காகத் தான் நடைபெறுகிறதே ஒழிய, ஏழை, எளிய மக்களுக்காக அல்ல என்பதை இக்குற்றச்சாட்டுகள் உறுதி செய்கிறது. இதன் மூலம் மோடி ஆட்சி ஒரு மக்கள் விரோத ஆட்சி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.