ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கிற வகையில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதோடு, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிப்பதுடன், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

22-March-2024

அறிக்கை

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்திலிருந்து மார்ச் 20 ஆம் தேதி 484 விசைப்படகுகளில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதில் நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 3 விசைப்படகுகள் மற்றும் அதிலிருந்த 25 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் சிறைபிடித்து கைது செய்துள்ளனர். இதைத் தவிர, தனுஷ்கோடிக்கு அருகில் இரண்டு விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 7 மீனவர்களையும் சேர்த்து 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இம்மாதம் 28 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது இவர்கள் அனைவரும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்கிற போதெல்லாம் எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும், சிறையில் அடைப்பதும் தொடர்கதையாக நடந்து வருகின்றன. சமீபத்தில் கன்னியாகுமரி பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழக மீனவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்ததை எவரும் மறந்திட இயலாது. மீனவர்கள் கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்கிற தொழிலை செய்வதற்கு குறைந்தபட்ச பாதுகாப்பு தர முடியாத பிரதமர் மோடி, தமிழக மீனவர்களுக்காக பரிந்து பேசுவதை விட ஒரு துரோகச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. தமிழக மீனவர் பிரச்சினைகளைப் பொறுத்தவரை, இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை அரசோடு பேசி மீனவர்கள் எவ்வித பிரச்சினையுமின்றி தங்களது தொழிலை தொடர்ந்து நடத்த உரிய பாதுகாப்பை ஒன்றிய பா.ஜ.க. அரசு உறுதி செய்ய வேண்டும். இதில் பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண வேண்டுமே தவிர, மேடையில் மீனவர்களுக்காக முழங்குவதால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. இலங்கை அரசோடு கடுமையான முறையில் பேச்சுவார்த்தை நடத்தினாலொழிய தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண முடியாது.
எனவே, ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கிற வகையில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதோடு, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிப்பதுடன், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
– தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.