அறிக்கை 22-July-2023
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த மே முதல் வாரத்தில் இருந்து பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. மணிப்பூரில் பெரும்பான்மையாக வாழுகின்ற மெய்தி மக்களுக்கும், குக்கி பழங்குடியின மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் தான் அம்மாநிலம் கலவர பூமியாகியுள்ளது. தொடர்ச்சியான வன்முறை கலவரங்களால் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. இதுவரை 120 க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் தாக்கப்பட்டு, அவற்றில் சில தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து 300 முகாம்களில் 60 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பழங்குடியினத்தை சேர்ந்த குக்கி மக்கள் வன்முறையாளர்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மலைகளில் உள்ள வனப்பகுதியில் ஓடி ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கே ஒரு உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. அவை தடுத்து நிறுத்துவதற்கு மணிப்பூரில் உள்ள இரட்டை என்ஜின் பாஜக அரசு முழு தோல்வி அடைந்து விட்டது.
74 நாட்களுக்கு முன்பு மே 4 ஆம் தேதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கும்பல் குக்கி இன மக்களை ஆயுதங்களுடன் தாக்கி கொடூரமாக வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தியுள்ளனர். அதில் இரு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த வீடியோ தேசத்தின் மனசாட்சியை உலுக்கி விட்டது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைப் படங்கள் நெஞ்சைப் பதற வைக்கின்றன. இதற்கு மத்திய, மாநில பாஜக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். மணிப்பூர் தீப்பற்றி எரிய ஆரம்பித்து 75 நாட்கள் கழித்து பாராளுமன்றம் கூட்டம் தொடங்குகிற போது பிரதமர் மோடி மணிப்பூர் கலவரம் குறித்து முதல் முறையாக 8 நிமிடங்கள் பேசியிருக்கிறார். இதில் மணிப்பூர் பற்றி 36 வினாடிகள் மட்டுமே பேசியுள்ளார். மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம் குஜராத் போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகளை விட்டுவிட்டு எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் மாநில குற்றங்களோடு சமம் செய்து மணிப்பூரில் சட்ட ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்ததை மூடி மறைத்திருக்கிறார். அங்கு நடந்த நூற்றுக்கணக்கான காட்டுமிராண்டித்தனமான வன்கொடுமை சம்பவங்களுக்கு சமீபத்தில் வெளியான வீடியோ ஒரு உதாரணம் மட்டுமே.
இந்த சம்பவம் இந்தியாவிற்கே அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து கூறும்போது ‘மணிப்பூர் சம்பவத்தை ஆட்சியாளர்கள் தடுத்து நிறுத்தவில்லை என்றால் நாங்களே நேரடியாகத் தலையிட நேரிடும்’ என எச்சரிக்கை விட்டது. இந்நிலையில் தான் பாராளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் மணிப்பூர் சம்பவத்திற்குப் பதில் கூற முடியாமல் சபை கூடுவதற்கு முன்பு பாராளுமன்றத்திற்கு வெளியே பிரதமர் மோடி உரை நிகழ்த்தியிருக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக எதிர்க்கட்சியினர் மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் விளக்கம் கூற வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியிருக்கிறார்கள் . அதற்கு அனுமதி அளிக்கப்படாததால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் மணிப்பூர் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் கூற மோடி தயாராக இல்லை. இதன்மூலம் பாராளுமன்ற ஜனநாயகத்தை அவமதித்திருக்கிறார்.
மணிப்பூர் மாநில பழங்குடியின சகோதரிகளுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை எதிர்த்து நாடு முழுவதும் தன்னிச்சையான போராட்டங்கள் நடந்து வருகின்றன. மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த நிகழ்வுக்கும், சட்ட ஒழுங்கு சீர்குலைவுக்கும் காரணமான பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்து குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். இது தான் எதிர்க்கட்சிகளின் ஒரே கோரிக்கையாகும்.
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் பலாத்காரம் செய்த கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறிய மணிப்பூர் மாநில அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் கூறவும் வருகிற ஜூலை 26 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியினரைக் கேட்டுக்கொள்கிறேன். துரியோதனன் சபையில் திரௌபதியை துச்சாதனன் துகிலுரித்து மானபங்கம் செய்தபோது நெட்டை மரங்களாக நின்று புலம்பியதை போல பிரதமர் மோடி புலம்பியிருக்கிறார். பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் எதிர்க்கட்சிகள் மீது பழி போடுகிறார். அன்றைக்குப் பாரதப் போரில் கௌரவர்களுக்கு என்ன கதி ஏற்பட்டதோ அதே கதிதான் பாஜகவுக்கும் விரைவில் ஏற்படப் போகிறது. மணிப்பூர் சகோதரிகளின் மானபங்கத்திற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்காமல் தப்ப முடியாது. மணிப்பூரில் நடந்த அவமானத்திற்குப் பொறுப்பற்ற முறையில் பதில் கூறுகிற பிரதமர் மோடிக்கு உரிய பாடத்தைப் புகட்டுவதற்கு ஜூலை 26 ஆம் தேதி நடைபெறுகிற மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று வெற்றிகரமாக நடத்திட வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
தலைவர் திரு கே எஸ் அழகிரி