குடியரசு தின வாழ்த்துச் செய்தி
விடுதலைக்கு பாடுபட்ட மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் குடியரசு ஆட்சிமுறை தான் இந்தியாவில் அமைய வேண்டும் என்று விரும்பினார்கள். அவர்களின் விருப்பத்தின்படி ஜனவரி 26, 1950 அன்று இந்தியா குடியரசு நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1952 முதல் பொதுத் தேர்தலில் 21 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டு மக்களாட்சி உறுதி செய்யப்பட்டது. பாராளுமன்ற ஜனநாயகம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன்மூலம் உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா பெருமைக்குரிய இடத்தை பெற்றது. இத்தகைய குடியரசின் 73-வது ஆண்டில் தலைநகரில் நடைபெறுகிற விழா மகிழ்ச்சிகரமானதாக அமையவில்லை.
கடந்த காலங்களில் நடைபெற்ற குடியரசு தின விழாக்களில் மாநிலங்கள் வடிவமைக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு மிகுந்த வரவேற்பையும், முக்கியத்துவத்தையும் பெற்று வந்தது. ஆனால், நடப்பாண்டில் பா.ஜ.க. அரசின் பாரபட்ச போக்கின் காரணமாக, குடியரசுதின அணிவகுப்பில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் சார்பாக அலங்கார ஊர்திகள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்பது முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தை பலகீனப்படுத்துவதோடு, பன்முக கலாச்சாரத்தை ஏற்க மறுக்கிற போக்காகவே இதை காண முடிகிறது. இதன்மூலம், ஒற்றை கலாச்சாரத்தை நடைமுறைப்படுத்த பா.ஜ.க. அரசு முயற்சி செய்வது மிகுந்த வேதனைக்குரியது. இந்தப் பின்னணியில் தான் நடப்பாண்டில் குடியரசு தின விழா நடைபெறவுள்ளது.
எனவே, இந்தியாவில் நிலவுகிற வேற்றுமைகளில் ஒற்றுமை கண்டு மதநல்லிணக்கமும், சமூகநீதியும் ஏற்படுகிற சூழலை உருவாக்க 73-வது குடியரசு தினத்தில் உறுதியேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனப்பூர்வமான குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கே.எஸ். அழகிரி