புதிய நடைமுறையை ஒன்றிய பா.ஜ.க. அரசு 100 நாள் வேலை திட்டத்தில் திணிக்க முயல்வது கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கிற செயலாகும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 29-June-2023

கிராமப்புற மக்களிடையே நிலவுகிற வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்குகிற வகையில் 2006 ஆம் ஆண்டு, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டம் தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம். இது ஒரு நிதியாண்டில், 100 நாட்கள் வேலை வாய்ப்பை வழங்கி, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை வளர்க்கும் நோக்கத்தை கொண்டது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் சராசரியாக 5 கோடி குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் 65 ரூபாயாக இருந்த ஒருநாள் ஊதியம், இன்று ரூபாய் 248 ஆக உயர்ந்திருக்கிறது. விலைவாசி உயரும் போது, ஊதியமும் உயர வேண்டுமென்று மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு ஆணை பிறப்பித்ததனால் இத்தகைய ஊதிய உயர்வு கிடைத்து வருகிறது. அன்னை சோனியா காந்தியின் கடுமையான முயற்சியின் காரணமாக டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 100 நாள் வேலை திட்டத்தின் முக்கியத்துவத்தை குறைக்கிற வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு, இந்த நிதியைக் குறைத்து ஒதுக்கி வருகிறது. அதனால், 100 நாள் வேலை திட்டம் முழுமையான பயனை அடைய முடியவில்லை.
2019-20 ஆம் ஆண்டு ஒதுக்கிய நிதி ரூபாய் 71,020 கோடி. 2020-21 இல் ரூபாய் 1 லட்சத்து 9 ஆயிரம் கோடி. ஆனால் இந்த தொகை 2022-23 நிதியாண்டில் ரூபாய் 88,641 கோடியாக குறைந்திருக்கிறது. ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு குறைந்த காரணத்தினால் 2019-20 இல் ஓராண்டுக்கான சராசரி வேலை நாட்கள் 48 ஆகவும், 2022-23 இல் 43 நாட்களாகவும் தான் உள்ளது.  இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாததால் கிராம அளவிலேயே சரியான புரிதலின்றி பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அடையாளஅட்டை வழங்குவதில் பல விதிமுறைகளை பா.ஜ.க. அரசு புகுத்தியிருக்கிறது. இதன்படி, வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிற பி.பி.எல். அடையாள அட்டை இருந்தால் தான் வேலை வழங்க வேண்டுமென்று நிர்ப்பந்திக்கப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை பொது விநியோகத் திட்டத்தில் அத்தகைய நடைமுறை கையாளப்படுவதில்லை. அதேபோல, 100 நாள் வேலை திட்டத்திலும் பி.பி.எல். அட்டை இருப்பவர்களுக்கு தான் வேலை என்று இதுவரை நிர்ப்பந்தம் செய்ததில்லை. ஆனால், சமீபத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு விதித்துள்ள நிபந்தனையின்படி, 100 நாள் வேலை திட்டத்திற்கு பி.பி.எல். அட்டை கட்டாயம் என்று வலியுறுத்தப்படுகிறது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் கிராமப்புற தொழிலாளர்களிடையே பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
சமீபத்தில் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சூரக்குளம் ஊராட்சியைச் சேர்ந்த சுமார் 450-க்கும் மேற்பட்டோர் 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். இதில் கிடைக்கிற ஊதியத்தின் அடிப்படையில் அவர்களது வாழ்வாதாரம் அமைந்திருந்தது. இந்நிலையில், வறுமைக் கோட்டின் கணக்கீட்டின்படி 85 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை இல்லை என்று திட்ட அலுவலர்கள் கூறியதாகத் தெரிகிறது.
மேலும், வறுமைக்கோட்டின் கணக்கீட்டின்படி ஒரு நாளைக்கு 50 பேருக்கு மட்டுமே 100 நாள் திட்டத்தில் வேலை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கிராமத்து மக்களில் நூற்றுக்கணக்கானவர்கள்  திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பாக முற்றுகை போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பதற்கான பி.பி.எல். அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கப்படும் என்கிற ஒன்றிய பா.ஜ.க. அரசின் அணுகுமுறையை உடனடியாக கைவிட வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டை பொறுத்தவரை இத்தகைய அணுகுமுறை பொது விநியோக திட்டத்திலோ, 100 நாள் வேலை திட்டத்திலோ இதுவரை பின்பற்றப்படவில்லை. இதுவரை பின்பற்றப்படாத புதிய நடைமுறையை ஒன்றிய பா.ஜ.க. அரசு 100 நாள் வேலை திட்டத்தில் திணிக்க முயல்வது கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கிற செயலாகும். இதன்மூலம் கிராமப்புற பொருளாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகி, ஏழை மக்கள் வறுமையில் சிக்க வேண்டிய அவலநிலை ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
(கே.எஸ். அழகிரி)