ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மே 13 முதல் மே 15 ஆம் தேதி வரை நடந்த 3 நாள் காங்கிரஸ் செயற்குழுவின் சிந்தனை அமர்வில் புதிய தீர்மானங்கள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி தெரிவித்த கருத்துகள்

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மே 13 முதல் மே 15 ஆம் தேதி வரை நடந்த 3 நாள் காங்கிரஸ் செயற்குழுவின் சிந்தனை அமர்வில் புதிய தீர்மானங்கள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்த கருத்துகள்:

நண்பர்களே,

இந்த சிந்தனை அமர்வில் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டோம். அதற்கான சிறந்த ஏற்பாட்டை செய்த அசோக் கெலாட், கோவிந்த் சிங் டோடாஸ்ராஜி மற்றும் அவர்களது சகாக்கள் அனைவருக்கும் உங்கள் சாபாகவும் என் சார்பாகவும் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்.

இந்த கூட்டத்தை மிகவும் பயனுள்ள கூட்டமாக கருதுகிறேன். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற உங்களில் பலருக்குக் கருத்துகளை வெளிப்படுத்தவும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆறு குழுக்களும் தனித்தனியே நடத்திய விவாதங்களின் சுருக்கத்தை நான் பெற்றுள்ளேன். நமது கட்சியின் நிலைப்பாடுகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களை அவர்கள் தெரிவிப்பார்கள். மாநில மற்றும் தேசிய அளவில் நடக்கும் தேர்தல்களுக்கான மதிப்புமிக்க தேர்தல் அறிக்கைகளை அவர்கள் தயார் செய்வார்கள். இந்தக் கட்டத்தில் பொருத்தமாக இருக்கும் என்பதால் குழுவின் அறிக்கையை கோடிட்டுக் குறிப்பிட விரும்புகின்றேன். உதய்பூர் புது உதய பிரகடனத்தின் ஒரு பகுதியாக சில யோசனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. குழுவின் விரிவான பரிந்துரைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

நாம் ஒன்றுபடும் வகையில் சந்தேகமின்றி புத்துணர்ச்சி பெறுவோம். அதற்காக புது உதய பிரகடனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்வரும் 4 குறிப்பிட்ட அறிவிப்புகளையும் கூடுதலாக வெளியிடுகிறேன்.

1. இந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று, கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ (இணைப்பு-ஒற்றுமை ) யாத்திரை காந்தி நகரிலிருந்து தொடங்கும். இதில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும். மன அழுத்தத்தில் இருக்கும் சமூக நல்லிணக்கப் பிணைப்புகளை வலுப்படுத்தும் வகையிலும், தாக்குதலுக்குள்ளாகியிருக்கும் நம் அரசியல் சாசனத்தின் அடித்தட்டு மதிப்புகளைப் பாதுகாக்கும் வகையிலும், கோடிக்கணக்கான நம் மக்களின் அன்றாட பிரச்சினைகளை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த பாதயாத்திரை அமையும்.

2. இதற்கிடையே, இரண்டாவது கட்டமாக மாவட்ட அளவிலான மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை வரும் ஜூன் 15 ஆம் தேதிக்குப் பிறகு ஒரு மாதத்தில் தொடங்க வேண்டும். இந்த விரிவான பிரச்சாரம் பொருளாதார பிரச்சினைகளில் குறிப்பாக, அதிகரித்து வரும் வேலையின்மையையும், வாழ்வாதாரத்தை அழிக்கும் தாங்க முடியாத விலைவாசி உயர்வையும் முன்னிலைப்படுத்தி நடைபெறும்.

3. உதய்பூரில் வெவ்வேறு குழுக்களால் விவாதிக்கப்பட்ட அவசியமான உள் சீர்திருத்தச் செயல்முறைகளைச் செயல்படுத்த பணிக்குழு அமைக்கப்படும். 2024 ஆம் ஆண்டு தேர்தலை மையமாகக் கொண்ட இந்த சீர்திருத்தங்கள் அமைப்பு, கட்சிப் பதவிகளுக்கான நியமன விதிகள், தகவல் தொடர்பு மற்றும் விளம்பரம், நிதி மற்றும் தேர்தல் நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் முன்னிலைப்படுத்தும். பணிக்குழுவின் அமைப்பு குறித்து அடுத்த 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கப்படும்.

4. காங்கிரஸ் செயற்குழுவிலிருந்து ஓர் ஆலோசனை குழுவையும் உருவாக்க முடிவு செய்துள்ளேன். அந்தக் குழு எனது தலைமையில் தொடர்ந்து சந்தித்து, அரசியல் பிரச்சினைகள் மற்றும் நம் கட்சியை எதிர்நோக்கியுள்ள சவால்களை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கும். காங்கிரஸ் செயற்குழுவும் அவ்வப்போது சந்திப்பது தொடரும். புதிய ஆலோசனை குழு கூட்டு முடிவு எடுக்கும் அமைப்பாக இருக்கும். பரந்த அனுபவம் கொண்ட மூத்த சகாக்களின் பரந்த அனுபவம் எனக்கு உதவியாக இருக்கும். இது பற்றியும் விரைவில் அறிவிக்கப்படும்.

இந்த 3 நாட்கள் நடந்த சிந்தனை அமர்வில், உங்கள் மூத்த தலைவர்கள் மற்றும் இளம் சகாக்களுடன் உரையாடி, ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் வாய்ப்பை நீங்கள் பெற்றுள்ளீர்கள். என்னைப் பொறுத்தவரை, 6 குழுக்களின் கூட்டத்திலும் அமர்ந்து சிலரது பேச்சுக்களைக் கேட்டேன்.

தற்போது எனது தனிப்பட்ட கருத்தை வெளிப்படுத்துகிறேன். நேற்று இரவு அசோக் கெலாட் அளித்த சிறந்த இரவு உணவை முடித்துவிட்டு வந்தேன். அந்த தருணம் என் குடும்பத்தாருடன் மாலை நேரத்தைச் செலவிடுவது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. சில இளம் விருந்தினர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டது என் மனதைத் தொட்டது. இந்த உத்வேகத்துடன் நாம் மாலை கலைந்து செல்வோம் என்று நம்புகிறேன்.

எனவே, என் நண்பர்கள் மற்றும் சகாக்களே, உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்தையும் நாம் கடந்து வருவோம். அதில் உறுதியாக இருப்போம். காங்கிரசுக்கு புதிய உதயம் இருக்கிறது. அதுவே நமது பிரகடனமாக இருக்கும்.

  • அன்னை சோனியா காந்தி