மத்திய, மாநில அரசுகளிடையே நல்லுறவை பேணிக் காக்க வேண்டிய தமிழக ஆளுநர், தமிழகத்திற்கு விரோதமாக செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 05 Jan 2022

தமிழகத்தில் உள்ள கிராமப்புற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை பாழடித்து, மருத்துவ கனவை சிதைத்து வருகிற நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுகிற வகையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை அனைத்து எதிர்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இக்கோரிக்கையை வலியுறுத்துவதற்காக குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து நாடாளுமன்ற தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்கள் மனு வழங்க முயற்சி செய்தனர். ஆனால், கொரோனா தொற்றை காரணம் காட்டி குடியரசுத் தலைவர் சந்திக்க மறுத்துவிட்டார். அவரிடம் வழங்க வேண்டிய மனுவை அவருடைய செயலாளரிடம் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

குடியரசுத் தலைவரை சந்திக்க முடியாத நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்க தமிழக நாடாளுமன்ற அனைத்து கட்சி உறுப்பினர்கள் திரு. டி.ஆர். பாலு தலைமையில் நேரம் ஒதுக்குமாறு கோரியிருந்தனர். கடந்த செவ்வாய்கிழமை இக்குழுவினரை சந்திக்க உள்துறை அமைச்சக அலுவலகத்தின் மூலம் நேரம் ஒதுக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் தமிழக எம்.பி.க்கள் சென்று பலமணிநேரம் அமித்ஷாவின் அலுவலகத்தில் காத்திருந்தும் அமித்ஷா அங்கு வராத காரணத்தால் சந்திக்க முடியவில்லை.

இதைத் தொடர்ந்து திரு. டி.ஆர். பாலு அவர்கள் தலைமையில் அனைத்து கட்சிக் குழுவினர் அமித்ஷா அலுவலகத்திற்கு மாலையில் மீண்டும் சென்ற போது, ஏற்கனவே திட்டமிட்டபடி, அமித்ஷா ஒரு கூட்டத்தில் பங்கேற்பதாகக் கூறி அவரை சந்திக்க வாய்ப்பில்லை என்று அவரது உதவியாளர்கள் கூறிவிட்டனர். அதற்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமித்ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்கிய பிறகு தானே நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்; அதற்குப் பிறகும் எங்களை சந்திக்காமல் புறக்கணிப்பது எங்களை அவமதித்ததாகவே கருதுகிறோம் என்று கடுமையாக கூறியிருக்கிறார்கள். அதற்கு அடுத்த நாள் புதன்கிழமை மீண்டும் அமித்ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்கப்பட்டது. அதற்கும் நேரம் ஒதுக்காத காரணத்தால் அமித்ஷா அலுவலகத்திற்கு தமிழக அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவாக நேரில் சென்று சந்திக்க முயன்றனர். ஆனால், அங்கே இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அலுவலகத்தின் வாசலிலேயே தடுத்து நிறுத்தி, உங்களை சந்திக்க நேரம் ஒதுக்காததால் நீங்கள் உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

இதைத் தொடர்ந்து திரு. டி.ஆர். பாலு அவர்கள் மத்திய அமைச்சர் அமித்ஷாவை தொடர்பு கொண்டு 10 நிமிடமாவது நாடாளுமன்ற குழுவினரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், கடைசி வரை தமிழக அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவினரை சந்திக்க அமித்ஷா நேரம் ஒதுக்க மறுத்துவிட்டார்.

கடந்த 10 நாட்களாக அமித்ஷாவை சந்திக்க திரு. டி.ஆர். பாலு எடுத்த முயற்சிகள் பலனளிக்காதது மிகுந்த கண்டனத்திற்குரியது. எல்லாவற்றையும் விட தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தமிழக ஆளுநர் முடக்கி வைத்திருப்பது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டிப் புதைக்கிற செயலாகும். மத்திய, மாநில அரசுகளிடையே நல்லுறவை பேணிக் காக்க வேண்டிய தமிழக ஆளுநர், தமிழகத்திற்கு விரோதமாக செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழக மாணவர்களின் எதிர்காலம் சம்மந்தப்பட்ட முக்கியமான பிரச்சினையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க அமித்ஷா மறுத்ததும், தமிழக ஆளுநர் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாததும் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அவமரியாதையாகவே கருத வேண்டியிருக்கிறது.

எனவே, தமிழக மக்களின் ஜீவாதாரப் பிரச்சினையான நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுகிற கோரிக்கை குறித்து மனுவை வழங்க முயன்ற தமிழக நாடாளுமன்ற அனைத்து கட்சிக் குழுவினரை சந்திக்க மறுத்தது அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயலாகும். நாடாளுமன்ற உறுப்பினர்களை மதிக்காத ஒருவர் உள்துறை அமைச்சராக இருப்பது மிகுந்த வெட்கக்கேடானதாகும். இதன்மூலம், நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமல்ல, அமித்ஷா ஒட்டுமொத்த தமிழக மக்களை  அவமதித்து, இழிவுபடுத்தியிருக்கிறார். இதற்காக  என்றைக்காவது ஒருநாள் அதற்குரிய பாடத்தை தமிழக மக்கள் புகட்டுவார்கள்.

கே.எஸ். அழகிரி