அறிக்கை | 08 July 2022
பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஒன்பதரை ஆண்டு கால ஆட்சியில் தான் கல்வியில் புரட்சி நடந்தது. மதிய உணவுத் திட்டம், தொழில் வளர்ச்சி, மின்துறையில் சாதனைகள், பாசனத் திட்டங்கள், நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள், மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் பஞ்சாயத்து ராஜ் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் அவரது ஆட்சிக் காலத்தில் தான் நிறைவேற்றப்பட்டது. அதனால் தான் காமராஜர் ஆட்சிக் காலத்தை தமிழகத்தின் பொற்காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்து பாராட்டுகிறார்கள்.
தமிழகத்தில் நீண்டகாலமாக அமலில் இருந்த பின்தங்கிய சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் கம்யூனல் ஜி.ஒ. செல்லாது என சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வர பிரதமர் நேருவை வலியுறுத்தியவர் பெருந்தலைவர் காமராஜர். இன்றைக்கு பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் இடஒதுக்கீட்டுப் பலனை அனுபவிக்கிறார்கள் என்றால், அதற்கான அடித்தளத்தை அமைத்த பெருமை அவருக்கு உண்டு.
தமிழகத்தின் முதலமைச்சராக ஒன்பதரை ஆண்டுகாலம் ஆட்சி செய்தார். முதலில் எட்டு, பிறகு ஒன்பது அமைச்சர்களோடும் எளிமையான, நேர்மையான சாதனைகளை படைக்கும் ஆட்சியை காமராஜர் நடத்தினார். தமிழகத்திலுள்ள மிகமிக பின்தங்கிய சமுதாய மக்களுக்கு கல்வி என்ற அழியாத சொத்தை வழங்குவதற்கு இலவச கல்வியையும், மதிய உணவு திட்டத்தையும் அறிமுகப்படுத்தியதால் காமராஜரை கல்வி வள்ளல் என்று நாடே பாராட்;டியது. படிக்காத காமராஜர், அனைவரையும் படிக்க வைத்து புரட்சி செய்தார்.
சுதந்திர இந்தியாவின் தொடக்க காலத்தில் 1954 முதல் 1964 வரை முதலமைச்சராக இருந்து ஆண்டுக்கு ரூபாய் 100 கோடிக்கும் குறைவான பட்ஜெட் சமர்ப்பித்து, இன்றைய நவீன தமிழகத்திற்கு அடித்தளம் அமைக்கிற வகையில் காமராஜர் அவர்களின் ஆட்சிமுறை இருந்தது. அவரது ஆட்சி முறையின் காரணமாகத் தான் தமிழகம் அனைத்து நிலைகளிலும் வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போட்டது. அவர் முதலமைச்சராக இருந்த போதுதான் கிராமப்புறத்தில் பல வளர்ச்சித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
எனவே, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120-வது பிறந்தநாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்;டிகளும் ஜூலை 15 அன்று ‘காமராஜர் ஆட்சி முறை’ என்கிற தலைப்பில் கருத்தரங்குகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல, நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் முன்னின்று இத்தகைய கருத்தரங்குகளை நடத்த இருக்கிறார்கள்.
ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முந்தைய காமராஜர் ஆட்சியின் சாதனைகளையும், அவருடைய அணுகுமுறைகளையும் இன்றைய இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்கிற வகையில் அந்தக் கருத்தரங்கம் அமைய இருக்கிறது. மேலும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளன்று ஏழை, எளிய மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்குகிற வகையிலும் நிகழ்ச்சிகள் அமைய உள்ளன.
12 ஆண்டுகாலம் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், ஒன்பதரை ஆண்டுகாலம் தமிழகத்தின் முதலமைச்சராகவும், நான்கு ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்து பிரதமர் நேரு மறைவிற்கு பிறகு லால்பகதூர் சாஸ்திரி, அன்னை இந்திரா ஆகியோரை பிரதமர்களாக தேர்ந்தெடுத்த பெருமை வேட்டி கட்டிய தமிழரான பெருந்தலைவர் காமராஜருக்கு உண்டு. தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு வித்திட்டு இன்றைய காங்கிரசின் அடையாளமாக திகழ்பவர் காமராஜர். எனவே, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி, பொது மக்களும் பெருமளவில் பங்கேற்று நன்றிப் பெருக்கோடு கர்மவீரருக்கு புகழ்மாலை சூட்டுவது அனைவரது கடமையும், பொறுப்புமாகும்.
கே எஸ் அழகிரி