நீண்டகாலமாக நீதிமன்றங்களிடையேயும், வழக்கறிஞர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் மொழி எல்லைகளைக் கடந்து நடைமுறையில் உள்ள ஏற்றுக் கொள்ளப்பட்ட பெயர்களை மாற்றி விட்டு புதிய பெயர்களை வைக்க வேண்டிய அவசியம் என்ன ? இது அப்பட்டமான இந்தி மொழி திணிப்பாகும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 12-August-2023

நாடாளுமன்ற கூட்டத் தொடரின் இறுதி நாளான நேற்று இந்திய குற்றவியல் சட்டங்களை மறு சீரமைத்து புதிய சட்டங்கள் கொண்டு வருவதற்கான 3 புதிய மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்துள்ளார். இதன்படி, 160 ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்திற்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா மசோதா, குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு பதிலாக பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மசோதா, இந்திய சாட்சியங்கள் சட்டத்திற்கு பதிலாக பாரதிய சாக்ஷிய மசோதா ஆகிய பெயர் மாற்றங்களோடு புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 20 நாள் கூட்டத் தொடரில் கடைசி நாளில் கொண்டு வரப்பட்டிருப்பதில் பா.ஜ.க. அரசின் உள்நோக்கம் தெரிகிறது. இந்தி போசாத மக்கள் மீது அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பிற்கு எதிராக இத்தகைய பெயர் மாற்றம் நிகழ்த்துவதற்கான முயற்சியில் ஒன்றிய பா.ஜ.க. அரசு இறங்கியுள்ளது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு விடப்பட்ட மிகப் பெரிய சவாலாகும்.

நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் ஆட்சி மொழியாக ஆங்கிலம் இருந்து வருவதை அனைவரும் அறிவார்கள். அதேநேரத்தில் இந்தி உள்ளிட்ட மாநில மொழிகளும் உள்ளன. ஆனால், நீண்டகாலமாக நீதிமன்றங்களிடையேயும், வழக்கறிஞர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் மொழி எல்லைகளைக் கடந்து நடைமுறையில் உள்ள ஏற்றுக் கொள்ளப்பட்ட பெயர்களை மாற்றி விட்டு புதிய பெயர்களை வைக்க வேண்டிய அவசியம் என்ன ? இந்தி மொழி பெயர்ப்புக்கு வேண்டுமானாலும் இந்த பெயரை வைத்துக் கொள்ளலாமே தவிர, ஆங்கிலத்தில் உள்ள பெயரை மாற்ற வேண்டிய அவசியம் ஏன் வந்தது ? இது அப்பட்டமான இந்தி மொழி திணிப்பாகும்.

நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு, இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தியோடு ஆங்கிலமும் தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்கும் என்று முன்னாள் பிரதமர் நேரு அவர்கள் திரு. ஈ.வெ.கி. சம்பத் உள்ளிட்ட இரு தி.மு.க. உறுப்பினர்களுக்கு ஜனநாயக ரீதியில் உறுதிமொழி கூறினார். அந்த உறுதிமொழியின் அடிப்படையில் தான் அன்றைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்திற்கு எதிராக தி.மு.க. நடத்த இருந்த கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தை தி.மு.க. தலைவர் அண்ணா கைவிட்டது வரலாறு. அதற்கு பிறகு பண்டித நேருவின் உறுதிமொழிக்கு ஆட்சி மொழிகள் சட்டத் திருத்தத்தின் மூலம் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியும், பிரதமர் இந்திராகாந்தியும் உறுதி செய்தார்கள். இதையொட்டி இந்தி பேசாத மக்கள் மீது இந்தி திணிப்பிற்கு எதிராக சட்டப் பாதுகாப்பு கிடைத்தது. இத்தகைய சட்ட பாதுகாப்பை சிதைக்கிற வகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆங்கிலத்தில் உள்ள பெயரை இந்தியில் மாற்றி, இந்தி பேசாத மக்கள் மீது திணிக்க முயல்வது அப்பட்டமான சட்டவிரோத செயலாகும். இதை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அரசியல் பேராண்மையோடு தமது கடுமையான எதிர்ப்பினை விரிவாக பதிவு செய்திருக்கிறார்.

மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும் போது, தமிழகத்தில் இந்தி திணிப்பதை எதிர்ப்பதாக கூறிக் கொண்டு இந்தி, சமஸ்கிருதம் படிப்பதற்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஒருவகை மொழி திணிப்பு என்று கூறியிருக்கிறார். ஆனால், தமிழகத்தில் 1968 இல் முதலமைச்சர் அண்ணா அவர்கள் தமிழும், ஆங்கிலமும் மட்டுமே அரசு பள்ளிகளில் கற்பிக்கப்படும் என்று இருமொழி கொள்கையை அறிவித்தார். அதன்படி தமிழக அரசு பள்ளிகள் பின்பற்றி செயல்பட்டு வருகின்றன. இந்தி, சமஸ்கிருதம் படிக்க விரும்புபவர்கள் இந்தி பிரச்சார சபாவிலோ, அல்லது வேறு எங்காவது படித்துக் கொள்ளலாமே தவிர, அதற்குரிய வாய்ப்பை உருவாக்குவது தமிழக அரசின் பொறுப்பல்ல. அப்படி சுயமாக இந்தி, சமஸ்கிருதம் படிக்க விரும்புபவர்களுக்கு தமிழகத்தில் எந்த தடையும் இல்லை.

இந்நிலையில், தமிழக அரசின் கொள்கையை மொழி திணிப்பு என்று நிர்மலா சீதாராமன் கூறுவது எந்த வகையிலும் நியாயமற்றதாகும். தமிழ்நாட்டின் கள நிலவரத்தை புரிந்து கொள்ளாமல், தமிழக மக்கள் மீது இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்க முயன்றால் அதன் விளைவுகளை பா.ஜ.க. கடுமையாக சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன். அதிகார மமதையில் ஆட்சியில் இருந்து கொண்டு தமிழக மக்களை கிள்ளுக் கீரையாக நினைத்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும். தமிழக மக்கள் எதையும் சகித்துக் கொள்வார்கள். ஆனால், இந்தியயும், சமஸ்கிருதத்தையும் திணிப்பார்களேயானால் தமிழகம் தழுவிய கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பா.ஜ.க.வினரை எச்சரிக்கிறேன்.

தலைவர் திரு கே எஸ் அழகிரி