அறிக்கை 14-August-2023
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கடுகளவு பங்கும் வகிக்காத பா.ஜ.க., 9 ஆண்டுகளாக மோடி தலைமையில் ஆட்சி செய்து வருகிறது. மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அபுல்கலாம் ஆசாத், வல்லபாய் படேல் ஆகியோரின் புகழை இருட்டடிப்பு செய்கிற வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற அரசியலை செய்து வருகிறது. இத்தகைய வாக்கு வங்கி அரசியல் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று வருகிறது. ஒட்டுமொத்த இந்தியர்களின் நலனில் அக்கறை இல்லாமல் குறிப்பிட்ட வகுப்பினரின் நலனை காக்கிற ஆட்சியாக பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு ஜாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து சமூக நல்லிணக்கத்தோடு இந்தியா வளர்ச்சிப் பாதையில் பயணித்தால் தான் அனைத்து மக்களின் வாழ்வாதாரமும் உறுதி செய்யப்படும். இத்தகைய சூழல் ஏற்படுவதற்கு விரைவில் தேசிய அளவில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளுக்கு நாட்டு மக்கள் ஆதரவு தர வேண்டும். அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகள் அனைவரும் ஓரணியில் திரண்டு ‘இந்தியா’ என்ற பெயரில் காங்கிரஸ் ஒருங்கிணைப்பில் 26 கட்சிகள் கூட்டணி அமைத்து செயல்படுகின்றன. இந்த செயல்பாடுகள் மோடிக்கு அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கின்றன.
இந்திய மக்களின் நலன்களுக்கு விரோதமாக ஜனநாயகத்திற்கு புறம்பாக ஆட்சி செய்து வருகிற மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியை 2024 இல் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் அகற்றிட சுதந்திர திருநாளில் சூளுரை மேற்கொள்வோம். இந்திய மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 77-வது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
– தலைவர் திரு கே எஸ் அழகிரி