தமிழர்களின் பண்பாட்டு திருவிழாவான பொங்கல் நன்னாளை போற்றிப் பாராட்டும் வகையில் அனைத்து மக்களின் பங்களிப்போடு பொங்கல் விழா சிறப்புற அமையட்டும். – திரு கே எஸ் அழகிரி

பொங்கல் வாழ்த்துச் செய்தி 13 Jan 2022

தமிழர்களின் மரபு வழிவந்த கலாச்சாரத்தின்படி, எந்தவொரு விஷயத்திலும் குடும்பத்தின் கூட்டு பொறுப்பு இருக்க வேண்டுமென்பதை பொங்கல் திருநாள் நமக்கு உணர்த்துகிறது. தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றியதாக அன்றும், இன்றும், என்றும் விளங்குவது பொங்கல் பண்டிகையின் தனிச் சிறப்பாகும்.

தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பொங்கல் பண்டிகை மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் உண்மையான கொண்டாட்டங்களை கிராமப்புறங்களில் தான் அதிகம் காண முடியும். சூரியனுக்கும், உழவர்களுக்காக உழைக்கும் கால்நடைகளுக்கும் மக்கள்  நன்றியைச் சொல்லும் விழாவாக பொங்கல் பண்டிகை அமைந்து வருகிறது.

தை முதல் தேதி தமிழாண்டின் முதல் நாளென்பதால் அதுவே தமிழர்களின் தமிழ்ப் புத்தாண்டு என கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இடையில் அந்த நடைமுறைக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மீண்டும் தை முதல் நாளான பொங்கல் திருநாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்திலுள்ள 2 கோடியே 18 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 1088 கோடி மதிப்பிலான 20 மளிகை பொருட்கள் அடங்கிய மஞ்சள் பை தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இதன்மூலம், ஒட்டுமொத்த தமிழர்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள். பொங்கல் விழாவுடன் திருவள்ளுவர் தினத்தையும் இணைத்து கொண்டாடுவது தமிழர்களுக்கு கூடுதல் சிறப்பாகும்.

தமிழர்களின் பண்பாட்டு திருவிழாவான பொங்கல் நன்னாளை போற்றிப் பாராட்டும் வகையில் அனைத்து மக்களின் பங்களிப்போடு பொங்கல் விழா சிறப்புற அமையட்டும். பொலிக ! பொலிக! பொங்கல் புத்தாண்டு என தமிழக மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.எஸ். அழகிரி