அறிக்கை | 08 Jan 2022
பிரதமரின் பஞ்சாப் பயணத்தை அரசியலாக்கி, கிடைத்த வரை லாபம் தேடும் முயற்சி சமீபத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே திட்டமிட்ட நாடகமோ? என்ற வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிரதமரின் பாதுகாப்புப் பணியில் உள்ள எஸ்.பி.ஜி. எனப்படும் சிறப்பு பாதுகாப்புக் குழுவினர், 122 கி.மீ தொலைவுள்ள சாலை வழியாக, பிரதமர் பயணிக்க கடைசி சில நிமிடங்களில் எப்படி அனுமதி அளித்தார்கள்? என்ற கேள்வி தான் சந்தேகங்களை விதைத்திருக்கிறது.
எஸ்.பி.ஜி. படையினருக்கு மட்டும் 2020-21 ஆம் ஆண்டில் ரூ.592 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் பாதுகாப்புக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு ரூ.1.62 கோடி செலவாகிறது. அல்லது ஒரு மணி நேரத்துக்கு ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் செலவாகிறது. பிரதமருக்குரிய பாதுகாப்பை முழுமையாக பொறுப்பேற்று செயல்படுத்த வேண்டியது எஸ்.பி.ஜி.யிடம் தான் இருக்கிறது. இந்த பொறுப்பை எஸ்.பி.ஜி. சரியாக நிறைவேற்றியதா ? என்ற கேள்வி தானாக எழுகிறது.
உள்துறை அமைச்சகம், எஸ்.பி.ஜி, ஐ.பி., ரா அமைப்பு மற்றும் பஞ்சாப் போலீசார் பிரதமரின் பயணத்திட்டத்தை ரகசியமாக வைத்திருந்திருப்பார்கள். பதிந்தாவிலிருந்து ஹூசைனிவாலா வரையிலான பிரதமரின் 2 மணி நேர 122 கி.மீ சாலைவழி பயணத்தை எஸ்.பி.ஜி. மாற்றியமைத்தது குறித்து மாநில காவல்துறைக்கு முறையான ஆலோசனை வழங்கப்பட்டதா ? அப்படி கடைசி நிமிட அவசரகதியில் மாநில காவல்துறைக்கு உரிய நேரத்தில் ஆலோசனை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆனாலும், மாநில காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 ஆயிரம் போலீசார் பிரதமர் பயணம் செய்யும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.
122 கி.மீ சாலை வழியாக பிரதமர் பயணம் செய்வதை எஸ்.பி.ஜி. அனுமதித்திருக்கக் கூடாது. பிரதமரின் வாகன அணிவகுப்பில் 5 நிமிடங்களுக்கு முன்பு எச்சரிக்கை வாகனம் சென்று கொண்டிருக்கும். எதிர்த் திசையில் வாகனங்கள் வந்து கொண்டிருந்தாலோ அல்லது சாலை மறியலில் போராட்டக்காரர்களைக் கண்டாலோ, முன்னதாகவே பிரதமர் வாகன அணிவகுப்பை ஏன் நிறுத்தவில்லை? போராட்டம் நடத்துவோருக்கு மிக அருகில் சென்று பிரதமரின் காரை மேம்பாலத்தில் நிறுத்தியது ஏன்? இது கடுமையான பாதுகாப்பு மீறல் அல்லவா?.
மேம்பாலத்தின் மீது பிரதமரின் வாகனம் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்ட போது, அருகாமையில் பா.ஜ.க.வினர் ஆயிரக்கணக்கில் கூடி கொடியசைத்து வாழ்த்து முழக்கங்கள் எழுப்பியது படங்களாக வெளிவந்திருக்கின்றன. பிரதமரின் வாகனத்திற்கு மிக அருகாமையில் சென்றது பா.ஜ.க.வினரே தவிர, 1 கி.மீ. தொலைவில் தடுத்து நிறுத்தப்பட்ட விவசாய சங்க போராட்டக்காரர்கள் அல்ல. எனவே, பிரதமர் உயிருக்கு ஆபத்து என்று கூறுவது அப்பட்டமான அரசியல் ஆதாயம் தேடுகிற நடவடிக்கையாகும். பிரதமரின் வானங்களுக்கு மிக அருகாமையில் பா.ஜ.க.வினர் நெருங்குவதற்கு எஸ்.பி.ஜி.யினர் எப்படி அனுமதித்தார்கள் ?
பிரதமரை கொல்வதற்கு சதித் திட்டம் என்று கூறுவது அப்பட்டமான அரசியல் நாடகமாகும். இந்த அடிப்படை ஆதாரமற்ற செய்தியை வைத்துக் கொண்டு தமிழகத்தில் பா.ஜ.க.வினர் சாலை மறியல் நடத்துவது, கோயில்களில் வழிபாடு நடத்துவது உண்மை நிலையை மூடிமறைத்து திசைத் திருப்புகிற அரசியலாகும். தலைநகர் தில்லியில் ஓராண்டு காலம் போராடிய விவசாயிகளை ஒரு நிமிடம் சந்தித்து பேச மறுத்த பிரதமர் மோடி மீது கூட பஞ்சாப் விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பான மனநிலை இருந்து வருகிறது. எப்படி தலைநகர் தில்லியில் நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய விவசாயிகளை அப்புறப்படுத்த முடியவில்லையோ அப்படியே தான் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் போராட்டத்தை அப்புறப்படுத்த முடியவில்லை.
பிரதமரின் பஞ்சாப் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் விவசாயிகள் போராட்டம் அல்ல. அதற்கு மாறாக, பிரதமரின் பொதுக்கூட்டத்திற்கு 70 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. பிரதமரின் வருகைக்கு ஒரு மணி நேரம் முன்னதாக 500 நாற்காலிகளில் தான் மக்கள் அமர்ந்திருந்தனர். மீதி நாற்காலிகள் காலியாக இருந்த செய்தி அறிந்த பிறகு பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை மூடிமறைக்கவே பா.ஜ.க.வினர் பிரதமரின் உயிருக்கு ஆபத்து என்று கபடநாடகம் நடத்துகிறார்கள். ஆளுநரை சந்தித்து மனு கொடுக்கிறார்கள்.
எனவே, பிரதமரின் பஞ்சாப் பயணம் ரத்து செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில காங்கிரஸ் அரசை கலைப்பதற்கான முயற்சியில் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஈடுபடுவதை கண்டிப்பதோடு, உண்மை நிலையை உணர்த்தும் வகையில் ஆளுநருக்கு அனுப்பக் கோரும் மனுவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் வருகிற 10 ஆம் தேதி திங்கட்கிழமை அளிப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
கே.எஸ். அழகிரி