அறிக்கை | 21 Nov 2021
1971 ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரில் அன்றைய இந்திய பிரதமர் அன்னை இந்திரா காந்தி தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் ஆற்றிய பணிகள் வங்கதேச வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாதவை. வங்கதேச அரசியலில் பல ஏற்றத்தாழ்வுகள் இருந்த போதிலும், பழைய கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு உறுதியான ஆதரவளித்த இந்திரா காந்தியை வங்கதேச மக்கள் எப்போதும் நேசித்து வந்துள்ளனர்.
மேற்கு பாகிஸ்தானோடு நடைபெற்ற 13 நாள் போரில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வங்கதேச விடுதலைக்கு வித்திட்டு மக்களின் பேராதரவு பெற்ற ஷேக் முஜிபூர் ரஹ்மான் அவர்களை பிரதமர் பொறுப்பில் அமர்த்தியவர் அன்னை இந்திரா காந்தி. அந்த காலகட்டங்களில் இந்தியாவிற்கு எதிராக சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் ஆயுத உதவியை மேற்கு பாகிஸ்தானுக்கு வழங்கின. அந்த நேரத்தில் உற்ற துணையாக இருந்து அனைத்து ராணுவ உதவிகளையும் செய்து, சோவியத் நாடு ஆற்றிய பங்கை எவரும் மறந்திட இயலாது. கிழக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட கலவரத்தின் போது ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். கடுமையான துன்பங்களுக்கு ஆளாகினர். இதனால் ஒரு கோடி மக்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். அவர்களுக்கு உணவும், தங்கும் வசதியும் ஏற்பாடு செய்து அரவணைத்தவர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. மேலும் உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதற்காக 20 நாட்கள் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வங்கதேச விடுதலைக்கு ஆதரவாக கருத்தொற்றுமையை திரட்டியவர். அன்னை இந்திரா காந்தியின் தொலைநோக்குப் பார்வையும் இந்திய ராணுவத்தின் தெளிவான அணுகுமுறையும் வங்கதேச விடுதலைக்கு பெரும் உதவியாக இருந்தன. இத்தகைய சாதனைகளைப் புரிந்து வங்கதேசம் விடுதலையைப் பெற்ற 50-வது ஆண்டு பொன்விழாவை அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் ராணுவத்தினர் பிரிவு சார்பாக நாடு முழுவதும் கொண்டாடுவதென முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, வங்கதேச விடுதலையின் 50-வது ஆண்டு பொன்விழா வருகிற நவம்பர் 22 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் எனது தலைமையில் நடைபெறுகிற விழாவில், சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய முன்னாள் ராணுவத்தினர் பிரிவின் அமைப்பாளர் கேப்டன் பிரவீன் தவார் அவர்கள் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்த இருக்கிறார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் முன்னோடிகள் பலர் பங்கேற்கின்றனர்.
இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்றுச் சாதனையான வங்கதேச விடுதலையின் 50-வது ஆண்டு பொன்விழாவில் அன்னை இந்திரா காந்தியின் அளப்பரிய சாதனைகளை நினைவு கூறுவோம்.
கே.எஸ். அழகிரி