குற்றவாளிகள், வகுப்பு வாதிகள், சாதி வெறியர்கள் மற்றும் வெறுப்பு அரசியலை வாக்காளர்கள் மத்தியில் தூண்டுபவர்களை தடுப்பதிலிருந்து தேர்தல் சீர்திருத்தம் தொடங்க வேண்டுமே தவிர, மாநில அரசுகளின் மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தைப் பறிக்கக்கூடாது. தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 23 Dec 2021

மோடி அரசின் தேர்தல் சீர்திருத்த சட்ட திருத்த மசோதா வெகுஜன வாக்குரிமை பறிக்கப்படுவதற்கும் மாநிலங்களின் அதிகாரத்தை ஆக்கிரமிப்பதற்கும் வழிவகுக்கும்.  பணபலத்தில் தேர்தல் நடத்துவதைத் தடுப்பதை உள்ளடக்கியதாக இருப்பதே உண்மையான தேர்தல் சீர்திருத்தம்.   தேர்தல் சட்ட திருத்த மசோதாவில் வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டு வந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மக்களவையில் எந்த விவாதமும் நடத்தாமல் இதே மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது, புட்சாமி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மீறும் வகையில் உள்ளது. இதுமட்டுமின்றி,  வெகுஜன வாக்குரிமையைப் பறிக்க வழிவகுக்கும் என்ற முக்கிய அச்சமும் இருக்கிறது.

குடியுரிமைச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட பல பிரச்சினைகளில், ஆதார் அட்டை இல்லாததால் பலர் பிரச்சினையை எதிர்கொண்டதைப் பார்த்தோம். இதனால்தான் தேர்தல் சீர்திருத்த சட்டதிருத்த மசோதாவின் நோக்கம் குறித்த அச்சம் ஏற்படுகிறது. தேர்தல் சீர்திருத்தத்தின் அடுத்தகட்டமாக, நாட்டில் நடக்கும் அனைத்து தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியலை மோடி அரசு விரும்புகிறது. மாநிலங்களின் அதிகாரம் மதிக்கப்பட வேண்டும். மேலும், மாநில தேர்தல் ஆணையங்கள் மத்திய அரசின் ஆணைகளை பின்பற்ற நிர்ப்பந்திக்கக் கூடாது.

தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்கள், மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தும் பொறுப்பை, மாநில தேர்தல் ஆணையத்துக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் கீழ் அரசியலமைப்பு வழங்கியுள்ளது. மக்களவை மற்றும் சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது. இந்த சூழலில் தான், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே வாக்காளர் பட்டியல் வேண்டும் என்று கோரி, மாநிலங்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம்  வழங்கியுள்ள அதிகாரத்தில் தலையிட்டு அரசியல் செய்ய மோடி அரசு  முயல்கிறது.

1992-க்குப் பிறகு, அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம், நாட்டில் மூன்றடுக்கு நிர்வாக முறை அமல்படுத்தப்பட்டபோது, மாநிலங்கள் மற்றும் மத்திய அரசைத் தவிர, பஞ்சாயத்து ராஜ் அமைப்பும் ஏற்பட்டது. இத்தகைய பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் ஒற்றை வாக்காளர் பட்டியலைக் கொண்டு வர விரும்புவதன் மூலம் நேரடியாகவே மத்திய அரசு அரசியல் விளையாட்டை ஆடுகிறது.  இதுபோன்ற சட்ட திருத்தம் மூலம் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைப் பறிக்க மோடி அரசு முயல்கிறது.

குற்றவாளிகள், வகுப்பு வாதிகள், சாதி வெறியர்கள் மற்றும் வெறுப்பு அரசியலை வாக்காளர்கள் மத்தியில் தூண்டுபவர்களை தடுப்பதிலிருந்து தேர்தல் சீர்திருத்தம் தொடங்க வேண்டுமே தவிர, மாநில அரசுகளின் மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தைப் பறிக்கக்கூடாது.

கே.எஸ். அழகிரி