தமிழக புத்தக அச்சகங்களின் கோரிக்கையின் நியாயத்தை ஏற்று, தமிழகத்தில் மட்டுமே பாடநூல்களை அச்சிடும் வகையில் தமிழக முதலமைச்சர் விரைவில் உத்தரவு பிறப்பிப்பார் என்று நம்புகிறேன். – கே எஸ் அழகிரி

அறிக்கை | 21 Dec 2021 

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தில்  பயிலும் மாணவர்களுக்கான 8 கோடி புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் ஒவ்வொரு ஆண்டும் அச்சிட்டு வழங்குகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல்  எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு உலகளாவிய டெண்டரை கொண்டு வந்ததையடுத்து, அச்சிடும் ஆர்டர்களை தமிழக அச்சகத்தினர் இழக்கும் ஆபத்து ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு வெளிமாநிலங்களின் அச்சகத்தாருக்கு  50 சதவீதமும் தமிழக அச்சகத்தாருக்கு 50 சதவீதமும் டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தமிழத்தில் உள்ள புத்தகம் அச்சிடும் அச்சகங்கள் மூடும் நிலைக்கு ஆளாகியுள்ளதாகவும் புத்தகம் அச்சிடுவோர் சங்கமும் பைண்டர்ஸ் சங்கமும் அச்சம் தெரிவித்துள்ளன.

ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள்,  பாடநூல்களை தங்கள் மாநிலத்திலேயே தான் அச்சடிக்கின்றன. பிற மாநிலங்களுக்கு வழங்குவதில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான் வெளிமாநிலங்களுக்கும் தமிழக பாடப்புத்தகங்களை அச்சடிக்க அனுமதிக்கப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு 50 சதவீத புத்தகங்களை அச்சிடும் டெண்டரின்படி, முதல் ஆர்டர் ஆந்திராவுக்கு வழங்கப்பட்டுள்ளதையும் தமிழகத்தைச் சேர்ந்த புத்தகம் அச்சிடுவோர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

பாடப்புத்தகங்கள் அச்சிடும் சங்கத்தினர் இந்த விஷயத்தை  மாநில பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து, தமிழ்நாடு பாடநூல்களை அச்சிடும் டெண்டரை மாநில அச்சகங்களுக்கு மட்டுமே வழங்கும் வகையில் அரசாணையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என, மாநில பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும் தமிழக அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற நிர்வாகத்தை முடுக்கி விட்டு, ஏகோபித்த பாராட்டுகளை  முதலமைச்சர் பெற்று வருகிறார்.  இந்த விஷயத்திலும்  தலையிட்டு தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் அச்சகத்தினரும், அதில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் உள்ளனர்.

எனவே, தமிழகத்தில் உள்ள பாடப் புத்தக அச்சகங்களின் கோரிக்கையின் நியாயத்தை ஏற்று, தமிழகத்தில் மட்டுமே பாடநூல்களை அச்சிடும் வகையில் தமிழக முதலமைச்சர் விரைவில் உத்தரவு பிறப்பிப்பார் என்று நம்புகிறேன்.

கே.எஸ். அழகிரி