அறிக்கை | 24 Nov 2021
சேலம், கருங்கல்பட்டி பகுதியில் நேற்று காலை ஒரு வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் 6 வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆனது. இதில் தீயணைப்புத்துறை அதிகாரி மற்றும் அவரது மனைவி உட்பட 5 பேர் உடல் நசுங்கி பரிதாபகரமாக பலியான செய்தி மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் தருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்திருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 5 லட்சம் நிவாரண தொகையை முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கியிருக்கிறார். இத்தகைய தீ விபத்துகள் நடைபெறாமல் இருப்பதற்கு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டரை எப்படி பயன்படுத்துவது, எப்படி பராமரிப்பது என்கிற பயிற்சியை பெட்ரோலியத்துறை ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் அளிப்பதன் மூலமே இத்தகைய விபத்துகளிலிருந்து அப்பாவி மக்களை பாதுகாக்க முடியும்.
சேலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீயணைப்புத்துறை அதிகாரி உட்பட 5 பேர் பலியான குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கே.எஸ். அழகிரி