100 நாள் வேலைத் திட்டத்தில் மத்திய பா.ஜ.க. அரசு குறைந்த அளவில் ஊதியத்தை உயர்த்துவதோடு, குறைந்தபட்சமாக வழங்க வேண்டிய ஊதியத்திலிருந்து 40 சதவிகிதம் குறைவாகவே வழங்குகிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 25 Nov 2021

மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 100 நாள் வேலைத் திட்டம் கொண்டு வரப்பட்ட 2006 இல் ஒருநாள் ஊதியம் ரூ.65 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இது படிப்படியாக உயர்ந்து 2014 இல் ரூ.148 வழங்கப்பட்டது. இத்திட்டம் உள்ளிட்ட வறுமை ஒழிப்பு நடவடிக்கையினால், 10 ஆண்டுகளில் 14 கோடி மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டது. இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஊதியம் நிர்ணயிப்பதற்கு அடிப்படையாக விலைவாசி குறியீட்டு எண் கணக்கில் கொள்ளப்பட்டது. விலைவாசி உயருகிறபோது நாள் ஊதியமும் உயர்த்தப்பட வேண்டும். பா.ஜ.க. ஆட்சியின் தொழிலாளர் துறை அமைத்த வல்லுநர் குழு கடந்த ஆண்டு விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஒருநாள் ஊதியமாக ரூ.383 அளிக்க வேண்டுமென பரிந்துரை செய்தது. ஆனால், அந்த பரிந்துரையை பா.ஜ.க. அரசு நிறைவேற்றத் தயாராக இல்லை.

100 நாள் வேலைத் திட்டத்தில் மத்திய பா.ஜ.க. அரசு குறைந்த அளவில் ஊதியத்தை உயர்த்துவதோடு, குறைந்தபட்சமாக வழங்க வேண்டிய ஊதியத்திலிருந்து 40 சதவிகிதம் குறைவாகவே வழங்குகிறது. தற்போது ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமாக ஊதியம் வழங்கப்படுகிறது. அரியானா மாநிலத்தில் ரூ.315, கர்நாடகாவில் ரூ.289, கேரளா ரூ.291, தமிழ்நாடு ரூ.273 என ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வேறுபாட்டுடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊதியம் எந்த அடிப்படையில் எத்தகைய அணுகுமுறையில் கையாளப்பட்டது என்கிற வெளிப்படைத்தன்மை இல்லை. இதில், விலைவாசி குறியீட்டு எண் அடிப்படையாகக் கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை 30 சதவிகிதம் மோடி அரசு  குறைத்துள்ளது.  நிதியை அதிகரிக்காமல், இந்த திட்டத்தின் முக்கிய சாராம்சமான ஒவ்வொரு குடும்பத்துக்கும் 100 நாட்கள் வேலை வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது. 51 சதவிகித குடும்பத்தினர் இந்த ஆண்டு 30 நாட்களுக்கும் குறைவாகவும், 10 சதவிகித குடும்பத்தினர் 80 நாட்களுக்கும் அதிகமாகவும்  வேலை செய்திருக்கிறார்கள். இந்த திட்டத்துக்கான நிதியைக் குறைத்திருப்பது கிராமப்புற ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்குச் சமமாகும்.

இந்த திட்டத்துக்கு வழங்குவதற்காக 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் நிதியில்லை. மேலும், இந்த திட்டத்தை மத்திய அரசு தான் செயல்படுத்தவேண்டுமே தவிர, மாநில அரசுகள் அல்ல.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலை கேட்ட 13 சதவிகித குடும்பங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இந்த நிதியாண்டின் முதல் அரை ஆண்டில் 10 மாநிலங்களில் இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களின் 71 சதவீத ஊதியம் தாமதம் ஆவதற்கு மத்திய அரசே காரணம். இத்தகைய செயல்  உச்ச நீதிமன்ற  தீர்ப்புக்கு எதிரானதாகும்.

கிராமப்புற இந்தியாவின் பாதுகாப்பு வலையாக 100 நாள் வேலைவாய்ப்பு வழங்கும் இந்த   திட்டம் உள்ளது. கொரோனா பொது முடக்கம் காரணமாக சொந்த ஊர்களுக்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் சேர்ந்துள்ளனர். ஆனால், அவர்களுக்குக் குறைவான நாட்களே வேலை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்குக் கூடுதல் நிதி ஒதுக்க மறுப்பதும், கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்காததும் மோடி அரசின் தவறான கொள்கையால் ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவையே பிரதிபலிக்கிறது.

அன்னை சோனியா காந்தியின் எண்ணத்தில் உதித்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம், கடந்த 2005 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் தொடங்கப்பட்டது. இதன்மூலம் கிராமப் பொருளாதாரம் உயர்ந்ததைக் கண்கூடாகப் பார்த்தோம். கிராமப்புற ஏழைகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமின்றி, வீழ்ந்து போன நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த திட்டத்தை வலுப்படுத்துவதோடு, அதனை விரிவுபடுத்தவும் வேண்டும். மேலும். இதற்காகக் கூடுதல் நிதியை ஒதுக்கி வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.

எனவே, மிகப்பெரிய வறுமை ஒழிப்புத் திட்டமான 100 நாள் வேலைத் திட்டத்திற்கு மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் வல்லுநர் குழு பரிந்துரைப்படி,  குறைந்தபட்சமாக விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஒருநாள் ஊதியமான ரூ.383 வழங்க மத்திய பா.ஜ.க. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் மாநிலங்களுக்கிடையே எவ்வித பாரபட்சமும் இல்லாமல் விலைவாசி குறியீட்டு எண் அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். தொடக்கத்திலிருந்தே  இத்திட்டத்தில் அலட்சியப் போக்கை  மத்திய பா.ஜ.க. அரசு  கடைப்பிடித்து வருகிறது. இந்த போக்கு தொடருமேயானால் கடும் விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கிறேன்.

கே.எஸ். அழகிரி