அறிக்கை | 26 Nov 2021
இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த அகில இந்திய சபாநாயகர்களின் 82 ஆவது மாநாட்டில் பங்கேற்று மாநில உரிமைகள் குறித்த வலுவான தமிழகத்தின் குரலை தமிழக சபாநாயகர் அப்பாவு ஒலித்திருக்கிறார். அவரது குரல் இந்தியாவில் பல மாநிலங்களில் ஆளும் பா.ஜ.க. அல்லாத அரசுகளின் குரலாக ஒலித்திருக்கிறது.
அவரது தமது உரையில்,’மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துவது சட்டமன்றத்தின் அதிகாரத்தைத் துருப்பிடிக்கச் செய்துவிடுகிறது. எனவே எந்தெந்தத் தீர்மானங்கள், எவ்வளவு காலத்துக்குள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பது பற்றியும், அவற்றைத் திருப்பி அனுப்புவதற்கும் ஒரு காலக்கெடுவை வகுப்பதற்கு நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதேபோல சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிவைக்கப்படும் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டால், அது குறித்த காரணங்களும் சொல்லப்பட வேண்டும். அப்போதுதான் அந்தத் தீர்மானத்திலுள்ள குறைகளைத் திருத்திக்கொண்டு, மற்றொரு மசோதாவை நிறைவேற்ற முடியும். 10-வது அட்டவணைப்படி சட்டப்பேரவை நலன் சார்ந்து சபாநாயகர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு இடையூறாக இருக்கும் முட்டுக்கட்டைகளை உடைத்தெறிய வேண்டும்’ என அவர் பேசிய பேச்சுக்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.
சபாநாயகர்களின் அதிகாரம் குறித்தும் அதில் மத்திய அரசு, நீதிமன்றங்களின் தலையீட்டினால் ஏற்படும் இடையூறுகள் குறித்தும் தனது கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார். மாநிலத்தின் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துவது, அந்த மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தக்கூடிய செயல் என்பதைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.
மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்தும் மசோதாக்களை கிடப்பில் போடுவதோ, திருப்பி அனுப்புவதோ, அந்த மாநில மக்களின் விருப்பத்துக்கு எதிரானது என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ள சபாநாயகர் அப்பாவு, குறிப்பிட்ட மசோதா ஏன் நிராகரிக்கப்பட்டது? என்ற காரணத்தையாவது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் அவரது தைரியமான பேச்சு உண்மையிலேயே வரவேற்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியது.
கே.எஸ். அழகிரி