அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு மக்கள் பாதிப்பிற்கு காரணமான அ.தி.மு.க.வினர் இன்றைய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களையோ, தமிழக அரசையோ விமர்சனம் செய்வதற்கு எந்த அடிப்படை உரிமையும் கிடையாது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 30 Nov 2021

கடந்த 2015 ஆம் ஆண்டை விட தமிழகத்தில் நடப்பாண்டில் அதிக கனமழை பெய்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் தனது பேட்டியில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் அளவு 2015 இல் 518 மில்லி மீட்டராக இருந்தது, 2021 இல் 613 மில்லி மீட்டராக உயர்ந்திருக்கிறது. அதேபோல, சென்னையில்  1,167 மில்லி மீட்டர், 1,121 மில்லி மீட்டராக பெய்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இதுவரை வடகிழக்கு பருவமழை பெய்த காலத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்த 59  குடும்பங்களுக்கு தலா ரூபாய் 4 லட்சம் வீதம் ரூ. 2.36 கோடி நிவாரணமாக  வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல, கால்நடைகளுக்கு 2.84 கோடி ரூபாயும், சேதமடைந்த குடிசைகளுக்கு 1.17 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக்காலங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கணக்கெடுத்து கண்காணித்திருந்தால் இந்த அளவிற்கு கூட பாதிப்பு வந்திருக்காது. ஆனால், 2015 வெள்ளப் பெருக்கின் போது அ.தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கு காரணமாக கடுமையான பாதிப்பை சென்னை மாநகரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டதை இங்கு நினைவு கூற வேண்டும்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 இல் தொடங்கி  டிசம்பர் 31 வரை பெய்யும் என்பதை அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் அறியாத ஒன்றல்ல. 2015 ஆம் ஆண்டில் நவம்பர் 1 இல் தொடங்கி  டிசம்பர் 2 ஆம் தேதி வரை 32 நாட்களில் 1,333 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவானது. இதில் நவம்பர் 1 முதல் 23 வரை 1,131 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அன்றைய தமிழக அரசிடம் முறையான நீர் மேலாண்மை இல்லாத காரணத்தால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் நவம்பர் 17 ஆம் தேதி ஒரே நேரத்தில் முன்னறிவிப்பு இல்லாமல் 18 ஆயிரம் கனஅடி நீரும், டிசம்பர் 2 ஆம் தேதி 29 ஆயிரம் கனஅடி நீரும் இரவு நேரங்களில் திறந்துவிடப்பட்டதால் ஆற்றங்கரையில் வாழ்ந்த அப்பாவி மக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதற்கும், உடமைகளை இழப்பதற்கும் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா தான் பொறுப்பு என்று குற்றம் சாட்டப்பட்டது.

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு நிறைவேற்றிய தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சில ஆண்டுகள் கழித்து அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அமைக்கப்பட்ட மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் 2015 டிசம்பர் 2 ஆம் தேதிக்கு முன்பு ஒருமுறை கூட கூடி விவாதிக்கவில்லை. பேரிடர் ஏற்படுவதற்கு முன்பு அதைத் தடுக்கிற வகையில் தான் ஒரு அரசு செயல்பட வேண்டுமே தவிர, பேரிடர் நிகழ்ந்த பிறகு நிவாரண உதவி செய்வது என்பது உண்மையான பேரிடர் மேலாண்மையாக இருக்க முடியாது. கடந்த காலத்தில் 2004 இல் சுனாமி, 2011 இல் தானே புயல் போன்ற படிப்பினைகளின் அடிப்படையில் அன்றைய ஜெயலலிதா அரசு செயல்படாத காரணத்தால் 600- க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு ஏற்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மக்கள் இழந்துள்ளனர். அரசுக்கு இழப்பு என்பதை விட, இந்த வெள்ளப் பெருக்கால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்திருக்கிறார்கள். இது மக்களுக்கு எதிராக அன்றைய ஜெயலலிதா அரசு இழைத்த மிகப்பெரிய குற்றமாகும்.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு மக்கள் பாதிப்பிற்கு காரணமான அ.தி.மு.க.வினர் இன்றைய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களையோ, தமிழக அரசையோ விமர்சனம் செய்வதற்கு எந்த அடிப்படை உரிமையும் கிடையாது.

கடந்த ஆட்சிக் காலத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வெள்ளப் பகுதிகளை ஒன்று ஹெலிகாப்டரில் பறந்து பார்வையிடுவார். இல்லையெனில் தமது சொகுசு வாகனத்தில் பயணம் செய்து தமது பாதம் தரையில் படாத அளவிற்கு பக்குவமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதை எவரும் மறந்திட இயலாது. இதன்மூலம் ஜெயலலிதாவின் மனிதாபிமானம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆனால், இன்றைய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடாத பகுதி எதுவுமே இல்லை என்று கூறுகிற அளவிற்கு அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரைத் துடைக்கவும், ஆறுதல் கூறவும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருவதைப் பாராட்டுவதற்கு மனம் இல்லையென்றாலும், குற்றம், குறை கூறாமல் இருக்கலாம். ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.தி.மு.க. தலைவர்கள் கடுமையான விமர்சனத்தை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழக மக்களை பொறுத்தவரை எதை மறந்தாலும் 2015 வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட பாதிப்பை மறக்க மாட்டார்கள்.

எனவே, மக்கள் நலனில் அக்கறையோடு, பொறுப்புணர்ச்சியுடன் முழங்கால் அளவு தண்ணீர் இருக்கின்ற இடங்களிலும் நடந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களோடு, மக்களாக அவர்களது துன்பத்திலும், துயரத்திலும் இரண்டறக் கலந்து செயல்படுகிற முதலமைச்சரை பார்த்து தமிழகமே பாராட்டுகிறது, போற்றுகிறது. அரசியல் எல்லைகளைக் கடந்து ஒட்டுமொத்த தமிழர்களின் நலனுக்காகப் பாடுபடுகிற தமிழக முதலமைச்சருக்கு பேரிடர் காலங்களில் உறுதுணையாக இருப்பது  அரசியல் கட்சிகளின் கடமையாகும். அந்த வகையில் எதிர்க்கட்சியாக இருக்கிற அ.தி.மு.க.விற்கும் இது பொருந்தும்.

கே.எஸ். அழகிரி