கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி
நாட்டு மக்களிடையே அன்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, மன்னிப்பு உள்ளிட்ட தூய நற்பண்புகளை தந்த இயேசு கிறிஸ்துவின் வழியில் பயணிக்கிற கிறிஸ்துவ பெருமக்கள், அனைத்து மக்களோடும் இரண்டறக் கலந்து மதநல்லிணக்கத்திற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்ந்து வருகிறார்கள். ஏழை,எளிய மக்கள் மீது மிகுந்த சேவை மனப்பான்மையோடு அன்பு காட்டுவதில் கிறிஸ்துவ மதம் அளப்பரிய பங்காற்றி வருகிறது.
கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் என பல அளப்பரிய பணிகளின் மூலம் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட விளிம்புநிலையிலுள்ள மக்களுக்கு, பாதுகாவலாக கிறிஸ்துவ மதம் விளங்குகிறது. ஆனால், இன்றைய பா.ஜ.க. ஆட்சியில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக சிறுபான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. அவர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களது சமூகப் பணியை முடக்குவதற்கு பா.ஜ.க. அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதை மகாத்மா காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு வழியில் வந்த மதச்சார்பற்ற சக்தியினர் அனுமதிக்க மாட்டார்கள்.
எனவே, மிகச் சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும், இயேசு கிறிஸ்து பிறந்த இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
கே.எஸ். அழகிரி