இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி உதயமாகி 136-வது ஆண்டை நிறைவு செய்து, 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி 137-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 25 Dec 2021

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி உதயமாகி 136-வது ஆண்டை நிறைவு செய்து, 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி 137-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. காங்கிரஸ் கட்சியின் வலிமையை முன்னிலைப்படுத்தவும், காங்கிரஸ் தலைவர்களின் பெருமையை வெளிப்படுத்தவும் நமக்கு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட பெருமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. இந்த சந்தர்ப்பத்தில், இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், திட்டங்களையும் மக்களிடையே பரப்புகிற வகையில் இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவன நாளை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட வேண்டும்.

காங்கிரஸ் நிறுவனநாள் நிகழ்ச்சிகள் கட்சியின் அனைத்து நிலைகளிலும் மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராம கமிட்டிகள் வரை, டிசம்பர் 28 ஆம் நாளை இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவன நாளாக மிகச் சிறப்பாக நிகழ்ச்சிகளை அமைத்து கொண்டாட வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் முதல் கிராமங்கள் வரையிலும், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களிலும் காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் முன்னோடிகள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள் துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் முழுமையான ஈடுபாட்டுடன் வரும் டிசம்பர் 28 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாளை மிகச் சிறப்பாக நடத்தும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவன நாளான டிசம்பர் 28 அன்று, சென்னை சத்தியமூர்த்தி பவன் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள 150 அடி உயர கொடிக் கம்பத்தில், காலை 9 மணிக்கு  காங்கிரஸ் கொடியை ஏற்ற இருக்கிறேன். அங்கு சேவாதள அணிவகுப்பு மரியாதையும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்களுக்கும், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களாக இருந்தவர்களின் திருவுருவப் படங்களுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்துகிற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்வில், காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்கள் மற்றும் பலர் பங்கேற்பார்கள்.

கே.எஸ். அழகிரி