நாடு முழுவதும் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது. ஐந்து மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையை மனதில் கொண்டு இந்த முடிவை அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தில் எடுத்துள்ளது.

அறிக்கை 30-August-2023

நாடு முழுவதும் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது. ஐந்து மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையை மனதில் கொண்டு இந்த முடிவை அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தில் எடுத்துள்ளது. எந்தவித விவாதமும் இல்லாமல் 3 வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதை எதிர்த்து, ஓராண்டு காலம் போராடிய விவசாயிகளை சந்தித்து குறைகளைக் கேட்க முன்வராத கொடூரமான ஆட்சியை நடத்திய பிரதமர் மோடி, பஞ்சாப் மாநிலத் தேர்தலை மனதில் கொண்டு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றார். அதைப் போலத் தான் இப்போதும் விலைக் குறைப்பு நாடகத்தை நடத்தியிருக்கிறது.

கடந்த 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது பெட்ரோலியப் பொருட்களின் விலையை பா.ஜ.க. அரசு குறைக்கவில்லை. மாறாக, கடந்த 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் கலால் வரியாக 32 லட்சம் கோடி ரூபாய் வரி விதித்து கஜானாவை நிரப்பிக் கொண்டது. இதன்மூலம், மக்கள் மீது சுமையை ஏற்றி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.

2014 இல், மே மாதத்தில் கலால் வரி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூபாய் 9.48 ஆக இருந்தது தற்போது, ரூபாய் 19.90 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, டீசல் மீது ரூபாய் 3.56 ஆக இருந்தது, தற்போது 15.80 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் கலால் வரியை உயர்த்தி கஜானாவை நிரப்புவதுதான் பா.ஜ.க.வின் நோக்கமாக இருந்தது. அந்த அடிப்படையில் தான் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 2014 இல் 400 ஆக இருந்தது, பா.ஜ.க. ஆட்சியில் 9 ஆண்டுகளில் 1118.50 ஆக கடுமையாக உயர்த்தப்பட்டது. தற்போது ரூ.200 குறைத்திருப்பது யானை பசிக்கு சோளப் பொறி போட்டதாகத் தான் கருத வேண்டும்.

ஒருபக்கம் 3 இலவச சிலிண்டர், 5 கிலோ அரிசி இலவசமாக வழங்குவதாக கூறுகிற பா.ஜ.க. ஆட்சியில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 125 இல் இருந்து 145 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், 84 சதவிகித மக்களின் உண்மையான வருமானம் கடுமையாக சரிந்துள்ளது. இந்தியாவின் கடன் 2014 இல் 55 லட்சம் கோடியாக இருந்தது, இப்போது 155 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. பா.ஜ.க. ஆட்சியில் மட்டும் 100 லட்சம் கோடி கடன் அதிகரித்திருக்கிறது. இதைவிட பொருளாதாரப் பேரழிவுக்கு வேறு சான்று கூற முடியாது.

2014-15 முதல் கடந்த 9 ஆண்டுகளில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலமாக ரூபாய் 14 லட்சத்து 56 ஆயிரத்து 226 கோடி கார்ப்பரேட்டுகளின் கடன் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதில், முக்கிய தொழிலதிபர்களின் கணக்கில் ரூபாய் 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி என்று ஆதாரப்பூர்வமான புள்ளி விவரங்கள் கூறுகிறது. இதன்மூலம் பா.ஜ.க. ஆட்சி யாருக்காக நடைபெறுகிறது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் வரலாறு காணாத வகையில் 23 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை திசைத் திருப்புகிற நோக்கத்தில் ராமர் கோவில் கட்டுவோம், அரசமைப்புச் சட்ட உறுப்பு 370 ரத்து செய்வோம், மணிப்பூர் மாநிலத்தில் வகுப்புவாத கலவரத்தை தூண்டி விடுவோம் என வெறுப்பு அரசியல் மூலம் வாக்கு வங்கியை விரிவுபடுத்துகிற முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. ஆனால், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி வாங்கும் சக்தியை இழந்து வாழ்வாதாரத்திற்காக போராடி வருகிற மக்கள், 2024 மக்களவைத் தேர்தலில் மோடி அரசுக்கு உரிய பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்.

தலைவர் திரு கே எஸ் அழகிரி