தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களின் பாராளுமன்ற உரையின் தமிழாக்கம்.

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி அவர்கள் ஆற்றிய உரை:

 

குடியரசுத் தலைவர் உரை இந்தியாவைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும். நாம் எங்கே இருக்கிறோம்…? நாம் எங்கே செல்ல வேண்டும்? நாம் சந்திக்கும் சவால்கள் என்ன? எத்தகைய கடினமான சூழலை நாம் சந்திக்கிறோம்? நாம் முன்னோக்கிச் செல்வதற்கான சரியான திசை ஆகியவற்றைப் பற்றி குடியரசுத் தலைவர் உரையில் பேசப்படவில்லை.

அரசாங்கம் செய்ததாகக் கூறுவதை வாசிக்கும் நீண்ட பட்டியலாக குடியரசுத் தலைவர் உரை அமைந்தது துரதிருஷ்டம். நம் நாடு பொதுவாகச் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகள் குறித்து குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிடப்படவில்லை. அதைத்தான் நான் இன்று விவாதிக்க விரும்புகின்றேன். தொலைநோக்கு பார்வையின்றி அதிகாரிகளின் யோசனையே குடியரசுத் தலைவரின் உரையாக இருக்கும் என்று நினைக்கிறேன். வலுவான அரசியல் தலைமையால் இந்த உரை கட்டமைக்கப்படவில்லை. ஆனால், அதிகாரிகளின் குழுவே இந்த உரையை சாதாரண காகிதமாக நினைத்து தயாரித்திருக்கிறது.

குடியரசுத் தலைவர் உரையில் காணாமல் போன விஷயங்கள் என்ன? எதைப் பற்றி குடியரசுத் தலைவர் உரை பேசவில்லை? குடியரசுத் தலைவர் உரையில் இந்திய மக்களுக்கு மறைக்கப்பட்டது என்ன?

குடியரசுத் தலைவர் உரையில் 3 அடிப்படை விஷயங்களைப் பேசவில்லை என்று நினைக்கிறேன்.

முதலாவதாக, நீண்ட காலமாக இருந்த ஒரே இந்தியா, தற்போது இரண்டு இந்தியாவாக மாறியிருக்கிறது. ஒரு இந்தியா வசதி படைத்த பெரும் பணக்காரர்களுக்கானது. பெரும் அதிகாரம் கொண்டவர்களுக்கானது. வேலை இல்லாதவர்கள், குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு இல்லாதவர்கள் தான் நாட்டின் இதயத்துடிப்பாக இருக்கிறார்கள்.

இந்த அரசை நடத்தும் என் நண்பர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். நான் பேசுவதன் நோக்கம் விமர்சிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. நாடு சந்திக்கும் பிரச்சினையைப் பற்றிய ஆதங்கத்தில் தான் பேசுகிறேன். இந்த நாட்டுக்கு என்ன ஆகுமோ? என்ற கவலையில் தான் பேசுகிறேன். இந்த நாட்டுக் குடிமகனுக்கு என்ன நடக்கிறது என்பதை மட்டும் பார்க்க வேண்டும்.

இரண்டு இந்தியா உருவாகிக் கொண்டிருக்கிறது. ஒன்று, பெரும் பணக்காரர்களுக்கான இந்தியா. மற்றொன்று, ஏழைகளின் இந்தியா. இந்த இரண்டு இந்தியாவுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் ரயில்வே வேலை தேடி அங்குள்ள இளைஞர்கள் என்ன செய்தார்கள் என்பது குறித்து இங்கே பேசிய நீங்கள் ஏதும் கூறவில்லை. இந்திய ஏழைக்கு இன்று வேலை வாய்ப்பு இல்லை. இது பற்றி குடியரசுத் தலைவர் உரையில் ஒரு வார்த்தை இல்லை. இன்றைக்கு உத்தரப்பிரதேசம், பீகார் மட்டுமின்றி நாடு முழுவதும் இளைஞர்கள் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்திய இளைஞர்கள் வேலை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். ஆனால், உங்கள் அரசாங்கத்தால் தரமுடியவில்லை.

நான் உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். கடந்த ஆண்டில் மட்டும் 3 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். 50 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இன்றைக்கு இந்தியாவில் வேலை இழந்து நிற்கிறார்கள். மேக் இன் இந்தியா பற்றிப் பேசினீர்கள், ஸ்டார்ட் அப் இந்தியா பற்றிப் பேசினீர்கள்…ஆனால், நம் இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதேசமயம், இருந்த வேலையும் பறிபோனது. இந்த உண்மையை நீங்களும் அறிவீர்கள். நீங்களும் வேலைவாய்ப்பு பற்றி ஏதும் பேசவில்லை. எவ்வளவு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்பது பற்றியும் நீங்கள் பேசவில்லை. உங்களால் பேசவும் முடியாது. அப்படியே நீங்கள் பேசினாலும், என்ன வேடிக்கை காட்டுகிறீர்களா? என இந்திய இளைஞர்கள் உங்களைப் பார்த்துக் கேட்பார்கள்.

இந்த இரண்டு இந்தியா எப்படி உருவானது? வேலைவாய்ப்பு, குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், அமைப்புசார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை அவர்களிடமிருந்து பறித்து இந்தியாவில் பெரும் பணக்காரர்களுக்குக் கொடுத்து விட்டீர்கள். கடந்த 7 ஆண்டுகளில் அமைப்புசாரா தொழில்கள் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்களை அடுத்தடுத்து அழித்து வந்திருக்கிறீர்கள்.

எப்படி அழித்தீர்கள்? பணமதிப்பிழப்பு, தவறான ஜிஎஸ்டி, கொரோனா காலத்தில் மக்களுக்குத் தர வேண்டிய ஆதரவைத் தராததின் மூலம் அழத்தீர்கள்.. இன்றைக்கு 84 சதவீத இந்தியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழ்மை அதிகரித்துக் கொண்டே போகிறது.

60 ஆண்டுகள் என்ன செய்தீர்கள் என்று நீங்கள் கேட்டீர்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 10 ஆண்டு கால ஆட்சியில் 27 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்தது. ஆனால், நீங்கள் 23 கோடி மக்களை மீண்டும் ஏழ்மைக்குத் தள்ளிவிட்டிருக்கிறீர்கள்.

என்ன நடக்கிறது என்றால், அமைப்புசார்ந்த தொழில்கள் ஏகபோகமாக மாறியிருக்கின்றன. எந்தத் துறையை எடுத்தாலும் இரண்டு ஏகபோகங்கள் இருக்கின்றன. கொரோனா, டெல்டா, ஒமிக்ரான் என வைரஸ்களின் வெவ்வேறு மாறுபாடுகளைப் பார்க்கிறோம். இதே போன்று இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் இரண்டு வைரஸ்கள் பரவுகின்றன.

இந்தியாவின் அனைத்து துறைமுகங்கள், இந்தியாவின் அனைத்து விமான நிலையங்கள். மின் விநியோகம், சுரங்கத் தொழில், பசுமை எரிசக்தி, கேஸ் விநியோகம், சமையல் எண்ணெய் வரை, எதுவாக இருந்தாலும் அதில் அதானி தெரிகிறார்.

மறுபக்கம் அம்பானி. பெட்ரோலியப் பொருட்கள், தொலைத்தொடர்பு, சில்லறை வர்த்தகம், இணைய வணிகம் ஆகியவற்றில் அம்பானியின் ஏகபோகம் மேலோங்கி இருக்கிறது. நாட்டின் முழு வளங்களும் குறிப்பிட்ட சிலர் கைகளுக்கே செல்கின்றன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி மற்றும் கொரோனா போன்ற காரணங்களால் அமைப்புசார்ந்த தொழில்களை அழித்தீர்கள். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை அழித்துவிட்டீர்கள். அவர்களுக்கு நீங்கள் ஆதரவு கொடுத்திருந்தால், உற்பத்தித் துறை மீண்டிருக்கும். உற்பத்தி செய்யும் திறன் பெற்றவர்களை எல்லாம் நீங்கள் அழித்துவிட்டீர்கள்.

இன்றைக்கு நீங்கள் மேட் இன் இந்தியா, மேட் இன் இந்தியா என்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள். மேட் இன் இந்தியா சாத்தியமே இல்லை. விஷயம் முடிந்து போய்விட்டது. மேட் இந்தியா என்பது என்ன? குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் தான் மேட் இன் இந்தியாவுக்கு சொந்தமானவர்கள். அமைப்புசார்ந்த தொழில்கள் நடத்துபவர்கள் தான் மேட் இந்தியாவுக்கு சொந்தமானவர்கள். அவர்கள் கதையை முடித்துவிட்டீர்கள். அதனால் தான் சொல்கிறேன். மேட் இன் இந்தியா சாத்தியமில்லை. மேட் இன் இந்தியாவை சாத்தியமாக்க குறு, சிறு தொழில்களை வளர்க்க வேண்டும். இவர்களுக்கு ஆதரவு தராமல் மேட் இன் இந்தியா எப்படி சாத்தியமாகும்?

கடந்த 5 ஆண்டுகளில் உற்பத்தித் துறை 46 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்களையும், அமைப்புசார்ந்த தொழில்களையும் அழித்ததுதான் இந்த வீழ்ச்சிக்குக் காரணம். உங்கள் கவனம் முழுவதும் 5 முதல் 10 பேர் வரை தான் உள்ளது. அது பற்றி நான் ஏதும் குறைகூறவில்லை. அவர்களையும் கவனியுங்கள். பெரும் பணக்காரர்களால் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாது. குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூலம் தான் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இது தான் எதார்த்தம்.

புது இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா என்று பேசிக் கொண்டேயிருக்கிறீர்கள். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஏழை இந்தியாவை நீங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். அனைவரும் வாய்மூடி மவுனம் காப்பார்கள் என்று மட்டும் நினைக்காதீர்கள். இந்தியாவின் 100 பணக்காரர்களிடம் இந்தியாவின் 55 கோடி மக்களின் சொத்துகளை விட அதிக சொத்துகள் உள்ளன. இந்த விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். 10 பேரிடம் இந்தியாவின் 40 சதவீத சொத்துகள். இது எப்படி நடந்தது? இதை நீங்கள் தான் செய்தீர்கள். நரேந்திர மோடி தான் செய்தார். பிரதமர் மோடியிடம் நான் முன்வைக்கும் வேண்டுகோள் இதுதான்.

இரண்டு இந்தியாவை உருவாக்கும் வேலையை உடனே கைவிடுங்கள். குறு,சிறு,நடுத்தர தொழிலுக்கு உதவி செய்யுங்கள். வேலையின்றி இருக்கும் நம் இளைஞர்களுக்கு உதவுங்கள். தொலைக்காட்சி, வாட்ஸ் அப், முகநூலில் உங்களுக்கு மார்க்கெட்டிங் செய்யும் 5 பேருக்கு நாட்டின் வளத்தைக் கொடுப்பதை நிறுத்துங்கள். நிறுத்தாவிட்டால், உங்களுக்கு அல்ல… நாட்டுக்கு இழப்பு ஏற்படும்.

இந்த நாட்டில் இரண்டு பார்வைகள் தான் உள்ளன. அரசியல் சாசனத்தை நீங்கள் புரட்டினால், இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தியா தேசம் என்று குறிப்பிடப்படவில்லை. அதற்கு என்ன அர்த்தம்? இந்த அவையில் இருக்கும் என் தமிழ்நாட்டுச் சகோதரருக்கு இருக்கும் உரிமை, இதே அவையில் இருக்கும் என் மகாராஷ்ட்டிரா, உத்தரப்பிரதேச சகோதரர், பீகார், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம். ஜம்மு காஷ்மீர், அந்தமான் சகோதரிகளுக்கும் உண்டு என்று அர்த்தம்.

இந்தியாவின் ஒன்றியம் என்றால் பேச்சுவார்த்தை, உரையாடல். தமிழ்நாட்டு நண்பரிடம் சென்று உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்பேன். அவரும் உங்களுக்கு என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்பார். இது பங்காளி அணுகுமுறை. இது மன்னராட்சி இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்நாளில் ஒருமுறை கூட தமிழக மக்களை ஆள முடியாது. இது நடக்கவே நடக்காது.

3 ஆயிரம் ஆண்டுகளாக நடக்காததை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். நம்மை ஆண்ட எந்த பேரரசரையும் எடுத்துக் கொள்ளுங்கள். அசோகர், மவுரியர்,குப்தர் என யாரை வேண்டுமானாலும் பாருங்கள். அனைவருமே பேச்சுவார்த்தை மற்றும் உரையாடல் மூலமே ஆட்சி செலுத்தியவர்கள். இன்றைக்கு என்ன பிரச்சினை என்பது பற்றி பாஜகவினர் குழம்பிப் போயிருக்கிறீர்கள். தமிழர்களின் மொழி, தமிழர்களின் கலாச்சாரம், தமிழர்களின் வரலாற்றைப் பார்த்து, அவர்களை அடக்கிவிடலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவர்களது வரலாற்றைப் பற்றி உங்களுக்கு எவ்வித புரிதலும் இல்லை. அவற்றை எப்படிக் கையாள வேண்டும் என்றும் உங்களுக்குத் தெரியவில்லை.

தமிழ் மக்களின் இதயத்துக்குள் தமிழ்நாடு குறித்த சித்தாந்தமும். மொழி குறித்த சித்தாந்தமும், இந்தியா குறித்த சித்தாந்தமும் உண்டு. இதில் நீங்கள் குழம்பக்கூடாது. கேரள மக்களுக்கும் கலாச்சாரம், கவுரவம், வரலாறு இருக்கிறது. ராஜஸ்தான் மக்களுக்கும் கலாச்சாரம், வரலாறு, மொழி, வாழ்வியல் முறை இருக்கிறது. இது தான் பூங்கொத்து. இது தான் நம் வலிமை.

தமிழக மக்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ராஜஸ்தான் மக்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். பாஜகவினரிடமிருந்து கூட நான் தினமும் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். இதை வேடிக்கைக்காகச் சொல்லவில்லை.

எப்படியோ, இந்தியாவை ஒரே குச்சியை வைத்துக் கொண்டு ஆளலாம் என்ற பார்வை உள்ளது. வரலாற்றைப் பற்றித் தெரியாததால் தான், உங்கள் கையில் இருக்கும் குச்சி நொறுக்கப்படுகிறது. நாட்டைப் பற்றிய உங்கள் தவறான பார்வையால் என்ன நடக்கிறது? நிச்சயமாக இரண்டு இந்தியாக்கள் உருவாக்கப்படுகின்றன. சபாநாயகர் அவர்களே, அப்படியானால் இந்த குறைபாடுள்ள பார்வையின் விளைவாக என்ன நடக்கிறது?

எப்படியிருந்தாலும் நம் நாட்டில் 2 பார்வைகள் உள்ளன. ஒன்று மாநிலங்களின் ஒன்றியம், கலாச்சாரங்களின் ஒன்றியம், உலகின் எந்த சக்திக்கும் சவால் விடக்கூடிய அழகான பூங்கொத்து. உலகின் எந்த சக்தியாலும் இந்த பூங்கொத்துக்கு சவால் விட முடியவில்லை.

1947 ஆம் ஆண்டு காங்கிரஸ் நீக்கிய மற்றொரு பார்வை அதிகாரக் குவியல். ராஜாவின் பார்வை, மன்னர் என்ற எண்ணம், எஜமானர்கள் என்ற எண்ணம் இப்போது மீண்டும் வந்துவிட்டது. சபாநாயகர் அவர்களே, இந்தத் தவறான பார்வையால் என்ன நடக்கிறது? நம் மாநிலங்களுக்கு இடையேயான உரையாடலின் கருவிகள், நம் நாட்டின் நிறுவனங்கள் என்று அழைக்கப்படுபவை ஒரு சித்தாந்தத்தால் தாக்குதலுக்கு ஆளாகிக் கைப்பற்றப்படுகின்றன. உதாரணத்துக்கு, தமிழ்நாட்டின் சித்தாந்தம் இந்திய நிறுவனங்களிலிருந்து விலக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களிடம் வந்து நீட்,நீட்,நீட்,நீட்,நீட்,நீட் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இல்லை, இங்கேயிருந்து வெளியேறு என்று நீங்கள் சொல்லிக் கொண்டே இருப்பீர்கள். உங்கள் கட்டமைப்பில் அவர்கள் குரல் எடுபடவில்லை.

3 விவசாயச் சட்டங்களை எதிர்த்துப் போராடிய பஞ்சாப் விவசாயிகளின் குரல் உங்களுக்கு கேட்கவில்லை. விவசாயிகள் ஓராண்டு போராட்டம் நடத்தினார்கள். கொரோனா காலத்திலும் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். பலர் இறந்தார்கள். அதைப் பற்றிக் கவலையில்லை.

என் பா.ஜ.க. சகோதர, சகோதரிகளே, பா.ஜ.க. உறுப்பினர் பாஸ்வானின் பேச்சைக் கேட்டேன். தலித்துகளின் வரலாற்றை அவர் அறிந்து வைத்திருக்கிறார். 3 ஆயிரம் ஆண்டுகளாக தலித்துகள் அடக்கி வைக்கப்பட்டிருந்ததை அவர் அறிந்திருக்கிறார். அவரைப் பற்றிப் பெருமையடைகிறேன். ஆனால் அவர் தவறான கட்சியில் இருக்கிறார்.

நாட்டில் குழப்பமான சித்தாந்தமும் குழப்பான புரிதலும் உள்ளன. ஒன்றியத்தின் மாநிலங்களின் குரல்களை ஒடுக்குவதற்கு நீதித்துறை, தேர்தல் ஆணையம் மற்றும் உளவு பார்க்கும் பெகாசஸ் ஆகியவற்றை, எதிர்த்து குரல் எழுப்பும் மாநிலங்களுக்கு எதிராகக் கருவிகளாக மத்திய அரசு பயன்படுத்துகிறது.

பிரதமரே தனிப்பட்ட முறையில் இஸ்ரேலுக்குச் சென்று பெகாசஸை வாங்குவதற்கு அங்கீகாரம் அளிக்கிறார். இதன்மூலம் அவர் தமிழ்நாட்டு மக்கள் மீதும், அசாம் மக்கள் மீதும், கேரள மக்கள் மீதும், மேற்கு வங்க மக்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருக்கிறார்.

ஒரு குறிப்பிட்ட அமைப்பு நாட்டின் நிறுவனக் கட்டமைப்பைக் கைப்பற்றி, இந்த நாட்டின் பல்வேறு மாநிலங்களின் குரல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த குரல்களிலிருந்து உங்களுக்கு எதிர்வினை வந்துவிடுமோ என்பது என் பயம். இந்த நாட்டின் நிறுவனக் கட்டமைப்பின் மீது நீங்கள் நடத்தும் இந்தத் தாக்குதல், மாநிலங்களிடமிருந்து எத்தகைய எதிர்வினையைப் பெறப்போகின்றன என்பது குறித்து எனக்குப் பயமாக இருக்கிறது. 15 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த என் தாத்தா, இந்த நிறுவனங்களைக் கட்டி எழுப்பினார். என் பாட்டி 32 முறை சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். என் தந்தை குண்டு வைத்துக் கொல்லப்பட்டார். இதன்மூலம் நாட்டைப் பற்றி எனக்கு ஓரளவாவது புரியும். என் ரத்தம் தியாகம் செய்திருக்கிறது. என் ரத்தம் என்றால்… என் தாத்தா, பாட்டி, தந்தை ஆகியோர் ரத்தம் சிந்தி இந்த நாட்டுக்காகத் தியாகம் செய்திருக்கிறார்கள். அந்த தியாகத்தை நான் புரிந்து கொள்கிறேன். நீங்கள் மிகவும் ஆபத்தான ஒன்றைக் கையாளுகிறீர்கள். ‘நிறுத்துங்கள்’ என்று நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். ஏனென்றால், நீங்கள் நிறுத்தாவிட்டால், ஒரு சிக்கலை உருவாக்குகிறீர்கள். ஏற்கெனவே நீங்கள் சிக்கலை உருவாக்கத் தொடங்கி விட்டீர்கள். வடகிழக்கு மாநிலங்களில் பிரச்சினை தொடங்கிவிட்டது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் பிரச்சினை தொடங்கிவிட்டது. இதெல்லாம் உங்கள் கண்களுக்கு தற்போது தெரியவில்லை.

ஜம்மு-காஷ்மீர் பற்றி மூன்றாவது கருத்தாகப் பேசுவேன். தற்போது நீங்கள் விளையாடிக் கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானது. வரலாறு குறித்த முழுமையான புரிதல் இல்லாததையே இது காட்டுகிறது. இந்தியாவை ஆண்ட அனைத்துப் பேரரசுகளையும் கவனமாகப் பாருங்கள். ஒவ்வொரு பேரரசும் மாநிலங்களின் ஒன்றியம் என்பதை நீங்கள் காண்பீர்கள். ஒரு சாம்ராஜ்யம் மட்டுமல்ல, அனைத்து சாம்ராஜ்யங்களும் மாநிலங்களின் ஒன்றியமாகவே இருந்திருக்கின்றன. அசோகர் காலத்தில் மாநிலங்களின் ஒன்றியம் இருந்ததால், எல்லா இடங்களிலும் தூண்களை அமைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அசோகர் என்ற அந்த பேரரசர் மாநிலங்களையும் அதன் மக்களையும் மதித்தார். ஆனால், நீங்கள் அனைவரையும் அவமரியாதை செய்கிறீர்கள். என்னை அவமரியாதை செய்யுங்கள். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால், இந்த நாட்டு மக்களை நீங்கள் அவமரியாதை செய்ய முடியாது.

இறுதியாக, என் உரையின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாக உண்மையில் நான் இன்னொன்றையும் கூற விரும்புகிறேன். மாநிலங்களின் ஒன்றியத்தை மன்னர் கால சித்தாந்தமாக மாற்ற முயல்வதற்கு மத்திய உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும். சில நாட்களுக்கு முன்பு ஓர் அரசியல் தலைவர் மணிப்பூரிலிருந்து வந்து என்னைச் சந்தித்தார். நான் அவர் பெயரைச் சொல்லப் போவதில்லை. அவர் பதற்றமாக இருந்தார். நான் அவரிடம், ” ஏன் பதற்றமாக இருக்கிறீர்கள் சகோதரரே” என்று கேட்டேன். அதற்கு அவர், ”மணிப்பூர் அரசியல் கட்சிகள் பிரதிநிதிக் குழுவினர் உள்துறை அமைச்சரை சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றோம். காலணிகளை வெளியே கழற்றிவிட வேண்டும் என்று சொன்னார்கள். நாங்களும் வெறும் காலோடு உள்ளே சென்றோம். அங்கே சென்று பார்த்தால், உள்துறை அமைச்சர் காலணி அணிந்தபடி அமர்ந்திருந்தார். இதற்கு என்ன அர்த்தம். உள்துறை அமைச்சர் காலணி அணியலாம். மணிப்பூர் அரசியல் கட்சி பிரதிநிதிகள் அணியக்கூடாதா? இதற்கு என்ன அர்த்தம்? ஏன்? நான் எதையும் தவறாகச் சொல்லவில்லை. நான் வேண்டுமானால் புகைப்படத்தைக் காட்டுகிறேன். இதன் பொருள் என்ன? இந்த விஷயத்தை மணிப்பூர் அரசியல்வாதி கூறிய போது நானும் தவறாகச் சொல்கிறீர்கள் என்று தான் அவரிடம் கூறினேன். அவரோ, ஆதாரமாகப் புகைப்படத்தை என்னிடம் கொடுத்தார். இந்திய மக்களைக் கையாளும் முறை இதுவல்ல. எப்படியோ, நான் இப்போது இறுதிக் கட்டத்துக்கு வருகிறேன். இது மிக முக்கியமான அம்சமாக இருக்கும் என்று நினைக்கிறேன். மணிப்பூர் அரசியல் கட்சி பிரதிநிதிகளைப் போல் உள்துறை அமைச்சரும் காலணியைக் கழற்றியிருக்க வேண்டும் என்பதே கலாச்சாரம். தன்னைச் சந்திக்க வந்தவர்களின் காலணிகளைக் கழற்றுவது கலாச்சாரம் இல்லை. உங்கள் கலாச்சாரம் எத்தகையது என்று எனக்குத் தெரியவில்லை. சபாநாயகர் அவர்களே, இது ஒருவித மனநிலையைப் பிரதிபலிக்கிறது. உன்னை விட நான் பெரியவன் என்ற உணர்வைப் பிரதிபலிக்கிறது. நீங்கள் ஒன்றுமில்லை, அனைத்தும் நான் தான் என்ற மனோபாவம் தான்… ‘நான் காலணி அணிவேன், நீங்கள் அணியக்கூடாது’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மீண்டும் முக்கிய விஷயத்துக்கு வருகிறேன். நமது நாட்டின் அடித்தளத்துடன் ஆர்எஸ்எஸ் மற்றும் பா.ஜ.க. விளையாடுகின்றன. அவை நம் நாட்டின் அடித்தளத்தைப் பலவீனப்படுத்துகின்றன. நமது மக்களிடையே உள்ள தொடர்பைப் பலவீனப்படுத்துகிறார்கள். நம் மொழிகளுக்கு இடையேயான தொடர்பை பலவீனப்படுத்துகிறார்கள். இன்றைக்கு ஓர் இளைஞர் கூட வேலை வாய்ப்பைப் பெற முடியாத அளவுக்கு நாட்டை பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போலன்றி, இந்தியா இன்றைக்குப் பலவீனமாக இருக்கிறது. குடியரசுத் தினத்தன்று வெளிநாட்டு விருந்தினரை ஏன் அழைத்து வரமுடியவில்லை என்பதை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். ஆச்சரியப்பட வேண்டாம்… இன்று இந்தியா முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கை, நேபாளம், பர்மா. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா போன்ற நாடுகளால் நாம் சூழப்பட்டுள்ளோம். நம் நிலையை எதிரிகள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

நாம் பலவீனமாகிவிட்டோம். நமது மக்களிடையே உரையாடல் நிகழவில்லை. நம் நிறுவனங்கள் தாக்குதலுக்குள்ளாகி நாம் முழுமையாகச் சுற்றிவளைக்கப்பட்டுள்ளோம். என்ன செய்ய வேண்டும் என்பதில் சீனர்களுக்குத் தெளிவான பார்வை உள்ளது. ஒரு நொடியில் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறார்கள். சீனாவையும் பாகிஸ்தானையும் பிரித்து வைத்திருப்பது தான் இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய ஆயுதம். இது தான் இந்தியாவுக்கு அடிப்படையானது. ஆனால், நீங்களோ அவர்களை ஒன்று சேர வைத்திருக்கிறீர்கள். இன்றைக்கு எந்த மாயையிலும் இருக்காதீர்கள். நம் முன் நிற்கும் சக்தியைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். பாகிஸ்தானையும் சீனாவையும் ஒன்றாகச் சேர்த்ததின் மூலம், இந்திய மக்களுக்கு எதிராக பெரும் குற்றத்தைச் செய்துள்ளீர்கள்.

சீனாவுக்கு என்று தெளிவான பார்வை உள்ளது. சீனா திட்டம் வைத்திருப்பதைக் குழப்பமின்றி என்னால் தெளிவாகப் பார்க்க முடிகிறது. தேசியவாதிகளாகிய நாம் அனைவரும் இது குறித்து தயவுசெய்து சரியாக விவாதிக்க வேண்டும். சீனாவின் திட்டத்தின் அடித்தளம் டோக்லாம் மற்றும் லடாக்கில் போடப்பட்டுள்ளது. நாம் எதிர்கொள்வதைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். இது இந்தியத் தேசத்துக்குக் கடுமையான அச்சுறுத்தலாகும்.

ஜம்மு-காஷ்மீரில் நாம் வியூகத் தவறுகளைச் செய்துள்ளோம். நமது வெளியுறவுக் கொள்கையில் வியூகத் தவறுகளைச் செய்துள்ளோம். சீனாவையும் பாகிஸ்தானையும் ஓரணியில் கொண்டு வந்திருக்கிறீர்கள். சீனர்களும் பாகிஸ்தானியர்களும் வாங்கும் ஆயுதங்களைப் பாருங்கள். அவர்களது செயல்பாட்டைப் பாருங்கள். அவர்கள் பேசும் விதத்தைப் பாருங்கள். யாரிடம் பேசுகிறார்கள் என்பதைப் பாருங்கள்.

நாம் மாபெரும் தவற்றைச் செய்துவிட்டோம். சீனாவிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த அவையில் தெளிவுப்படுத்த விரும்புகின்றேன். எது நடந்தாலும், அதற்கு நீங்கள் பொறுப்பாவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால் தான் ஒரே தேசமாக நாம் இந்த உரையாடலைத் தொடங்குவது அவசியம்.

எங்களுக்கு இதில் அனுபவமும் புரிதலும் இருப்பதால், தேசத்தின் முக்கியத்துவம் கருதி நாங்கள் சொல்வதை நீங்கள் கவனிக்க வேண்டும். எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நான் சொல்வதை, உங்களில் சிலர் புரிந்து கொள்வதை என்னால் பார்க்க முடிகிறது. இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த மூன்று அம்சங்களைத் தான் இன்று நான் சொல்ல விரும்பினேன். தேசம் இப்போது ஆபத்தில் உள்ளது. வெளியிலிருந்து தேசத்துக்கு ஆபத்து உள்ளது. இது ஒரு இக்கட்டான நிலை. அதை நான் விரும்பவில்லை. என் அன்புக்குரிய நாட்டின் நிலையைப் பார்த்து மிகவும் சங்கடம் அடைகிறேன். அண்டை நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம், மாநிலங்களால் ஒருவருக்கொருவர் உரையாட முடியவில்லை. இது எனக்குக் கவலை அளிக்கிறது. இத்தகைய பிரச்சினைகள் என் நாட்டை அச்சுறுத்துவதால் நான் இன்று அது குறித்துப் பேசுவது முக்கியம் என்று நினைத்தேன். உங்களில் பலர் நான் சொல்வதை குப்பை என்று நினைப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். நான் சொன்னதை நீங்கள் செய்தால் மகிழ்ச்சியடைவேன். ஆனால், நான் சொல்வதை நினைவில் வையுங்கள். நீங்கள் இந்த தேசத்தையும், இந்த அற்புதமான தேசத்தையும் அதன் மக்களையும் பெரும் ஆபத்தில் ஆழ்த்துகிறீர்கள். நிறுத்துங்கள்!

நன்றி!