உக்ரைனில் சிக்கித் தவித்து வருகிற இந்தியர்களில் பலர் ருமேனிய எல்லை பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அவர்களை வெளியேற்றுவதற்கு இந்திய அரசு எந்த முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 03 Mar 2022

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தொடர்ந்து சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். இந்திய அரசின் தெளிவான அணுகுமுறை இல்லாத காரணத்தால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. கர்நாடகத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் உட்பட இருவர் இதுவரை பலியாகி இருக்கிறார்கள். எஞ்சியிருக்கும் இந்தியர்கள் அங்கிருந்து எப்படித் தப்பித்து வெளியேறுவது என்று தெரியாமல் மிகுந்த வேதனையுடன் இருக்கிறார்கள். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு அங்குள்ள இந்தியத் தூதரகம் எந்த உதவியும் செய்யவில்லை. மாறாக, உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வில் இந்திய மாணவர்களில் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். அங்கே இருக்கிற இந்தியத் தூதரகம் அவர்களுக்கு குறைவான அவகாசம் வழங்கி அனைவரும் வெளியேறும்படி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இது அங்கு இருக்கிற நூற்றுக்கணக்கான மாணவர்களிடையே கடும் கோபத்தையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்தியிருக்கிறது.

போர் தொடங்கப்பட்டு இவ்வளவு நாட்கள் ஆனபிறகும் கூட தெளிவான முடிவெடுக்காமல், திடீரென அவர்களையெல்லாம் வெளியேறி குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும்படி கூறுவது எந்த வகையில் சாத்தியம் என்று தெரியவில்லை. இந்த அறிவிப்பினால் மீண்டும் ரஷ்யாவின் தாக்குதல் எந்த நேரத்திலும் ஏற்படுமோ என்கிற அச்சம் அவர்களை வாட்டி வதைத்து வருகிறது.

உக்ரைனில் சிக்கித் தவித்து வருகிற இந்தியர்களில் பலர் ருமேனிய எல்லை பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அவர்களை வெளியேற்றுவதற்கு இந்திய அரசு எந்த முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை. உக்ரைன் எல்லையை விட்டு வெளியே போங்கள் என்று மட்டுமே இந்திய தூதரகம் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால், எல்லையில் இருந்து 800 கி.மீ. தொலைவில் உள்ளவர்கள் எந்தவித போக்குவரத்து வசதியும் இல்லாமல், எப்படி செல்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள். பலர் ரயில் நிலையங்களில் இரண்டு, மூன்று நாட்;களாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உணவோ, மற்ற பொருட்களோ வாங்க எந்த கடையும் திறக்கவில்லை. இந்நிலையில், அவர்களிடம் இந்திய தூதரகம் எவ்விதத் தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் செயலற்று கிடக்கிறது. இதன்மூலம், உக்ரைனில் சிக்கி தவித்து வருகிற ஆயிரக்கணக்கான மாணவர்களை காப்பாற்றி இந்திய நாட்டிற்கு அழைத்து வருகிற முயற்சிகள் பெரும் தோல்வியை சந்தித்துள்ளன.

ஆனால், பிரதமர் மோடி அவர்கள், உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க முடிந்ததற்கு இந்தியாவின் ஆற்றலே காரணம் என்று பெருமிதப்பட்டுக் கொள்வதன் மூலம் தேர்தல் பரப்புரையில் இறங்கியிருக்கிறார். இதைக்கூட அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவது அவரது அரசியல் சிறுமைத்தனத்தைத் தான் காட்டுகிறது. பரந்த மனப்பான்மையோடு செயல்பட வேண்டிய பிரதமர் மோடி, தேர்தல் அரசியலுக்காக இதை பயன்படுத்திக் கொள்வது வன்மையான கண்டனத்திற்குரியது.

எனவே, உக்ரைனில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிற இந்தியர்களை பாதுகாப்பதற்கு மோடி அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

கே எஸ் அழகிரி