அறிக்கை | 03 Dec 2021
2020 ஆம் ஆண்டு கொரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு, இந்தியாவில் மட்டும் 1 லட்சத்து 53 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 53 ஆண்டுகளில் நடந்த அதிகபட்ச தற்கொலைகள் இது தான்.
2020 ஆம் ஆண்டு மட்டும் 22 ஆயிரத்து 374 குடும்பத்தலைவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது கடந்த 2019 ஆம் ஆண்டைவிட 4.8 சதவிகிதம் அதிகம். இதே ஆண்டில் மட்டும் 37 ஆயிரத்து 666 தினக்கூலி தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது 2019 ஆம் ஆண்டை விட 15.7 சதவிகிதம் அதிகம். 2019 ஆம் ஆண்டைவிட 2020 ஆம் ஆண்டில் தற்கொலை நிகழ்வுகள் 10 சதவிகிதமாக உயர்ந்துள்ளன. 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் நடந்த தற்கொலைகளில், மகாராஷ்ட்டிரா, தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசத்தில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு நிகழ்ந்துள்ளன.
2020 ஆம் ஆண்டு மட்டும் மாணவர்கள் தற்கொலை 21.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தினமும் சராசரியாக 34 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நாடு முழுவதும் இந்த ஆண்டில் மட்டும் 12,500 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்ற தகவல் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. இதில் 6,598 பேர் தமிழ்நாடு, மகாராஷ்ட்டிரா, ஜார்கண்ட், ஒடிசா, மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட 1 லட்சத்து 30 ஆயிரம் பேரில் 7.4 சதவிகிதத்தினர் மாணவர்கள். 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் தற்கொலை செய்து கொண்ட 1 லட்சத்து 50 ஆயிரம் பேரில் 8.2 சதவிகிதம் பேர் மாணவர்கள். நீட் தேர்வு காரணமாக மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 16 மாணவ, மாணவிகளை தமிழகம் இழந்துள்ளது.
நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு பிரதமர் கிஸான் திட்டத்தின் மூலம் எந்தப் பலனும் ஏற்படவில்லை. 2020 ஆம் ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 10 ஆயிரத்து 677 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 7 சதவிகிதம் அதிகமாகும்.
கொரோனா பொது முடக்கக் காலங்களில் பிரதமர் மோடியின் நெருங்கிய பெரும் தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு மட்டும் பன்மடங்கு உயர்ந்தது. வேலையிழப்பு, வருவாய் இழப்பு, கற்றல் முறை, தேர்வு முறை, பொருளாதாரச் சூழல் காரணமான மன அழுத்தத்தால் 1 லட்சத்து 53 ஆயிரம் உயிர்களை பலி கொடுத்து விட்டு, சில தொழிலதிபர்களை வாழ வைக்கும் அரசை என்ன சொல்லி அழைப்பது ?
பிணங்கள் மீது தான் ஆட்சி நடத்துவோம் என்று முரண்டு பிடித்தால், மக்கள் வெகுண்டெழுந்து தண்டிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.
கே.எஸ். அழகிரி