வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுகிற முடிவை எடுக்க காரணமாக இருந்த விவசாய சங்கங்களுக்கும், அவர்களது கோரிக்கையை தேசிய அளவில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கும் கிடைத்த வெற்றியாகத் தான் கருத வேண்டும். – தலைவர் திரு கே.எஸ். அழகிரி

அறிக்கை | 19 Nov 2021

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற வகையில், மூன்று வேளாண் சட்டங்களை கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் பா.ஜ.க. நிறைவேற்றியது. இதை எதிர்த்து எதிர்கட்சி உறுப்பினர்கள் கடுமையாகக் குரல் கொடுத்தார்கள். விவசாயிகளையோ, விவசாய சங்கங்களையோ கலந்தாலோசிக்காமல் விவசாயிகள் குறித்து சட்டம் இயற்றுவதற்கு பா.ஜ.க.விற்கு எந்த உரிமையும் இல்லை என்று அகில இந்திய விவசாயிகள் அமைப்பு  கடுமையான போராட்டத்தை தொடங்கியது. கடும் குளிர், மழை, வெயில் என்று பாராமல் கடந்த ஓராண்டாக விவசாயிகள் தலைநகர் தில்லியில் போராடினார்கள். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். போராட்டம் நடத்திய விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை  நடத்தக் கூட பிரதமர் மோடி தயாராக இல்லை.

விவசாயிகளின் கோரிக்கையை துச்சமென மதித்த பிரதமர் மோடி திடீரென்று மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதென அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு விவசாயிகளின் நலனில் அக்கறையோடு செய்யப்பட்டதாக கருத முடியாது. சமீபத்தில் நடந்த இடைத் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியும், 5 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் உத்தரபிரதேசத்தில் லக்கிம்பூர்கேரியில் நடைபெற்ற படுகொலையினால் விவசாயிகளிடையே எழுந்த எதிர்ப்பை தணிக்கவுமே இந்த முடிவை பிரதமர் மோடி எடுத்திருக்கிறார். வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுகிற முடிவு ஒரு சந்தர்ப்பவாத நடவடிக்கையாகும். இதில் அரசியல் உள்நோக்கத்துடன் பிரதமர் மோடி செயல்பட்டுள்ளார்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுகிற முடிவை எடுக்க காரணமாக இருந்த விவசாய சங்கங்களுக்கும், அவர்களது கோரிக்கையை தேசிய அளவில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கும் கிடைத்த வெற்றியாகத் தான் கருத வேண்டும்.

கே.எஸ். அழகிரி